நேசம் எண்டர்டெய்ன்மெண்ட், ஜி கே எஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன், ரோமியா பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ஹபீபி. இதில் கஸ்தூரி ராஜா, ஈஷா முகம்மது, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ , அனுஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள்குமார், ரேகா குமணன், இஸ்மத் பானு, யூடியூபர் கைஜென் மலர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சாகுல் ஹமீது, மாஸ்டர் தீஹான், தீக்ஷா ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி. எஸ். முகமத் அமீன் எழுதிய கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் மீரா கதிரவன். சாம் சி.எஸ் இசையமைத்திருக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
1980 களில் தென்காசி, கடையநல்லூரில் ஹபீபி திரைப்படத்தின் கதை நிகழ்கிறது. கூட்டுக்குடும்பமாக வாழும் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் தலைவர். கஸ்தூரிராஜா. பல தலைமுறைகளாக கைத்தறி நெசவுத் தொழிலை நம்பி வாழ்ந்து வருபவர். இயந்திரங்களின் வருகையால் நலிவுற்ற நெசவுத் தொழிலை கைவிடமுடியாமல் தவித்து வரும் சூழலில், குடும்ப சூழல் கருதி, வளைகுடா நாட்டிற்கு வேலைக்காக செல்கிறார், இவரது தம்பி. அதன் பிறகு குடும்பத்தின் பொருளாதாரா சூழல் செழுமையான பக்கம் திரும்புகிறது. கஸ்தூரி ராஜாவின் மகன் ஈஷா முகம்மதுவையும் தன்னுடன் அழைத்துச்செல்ல விரும்புகிறார், கஸ்தூரிராஜாவின் தம்பி. ஆனால் ஈஷாவுக்கு குடும்பத்தை பிரிந்து செல்ல மனமில்லை. இந்நிலையில், ஈஷாவுக்கும் அதே ஊரைச்சேர்ந்த மாளவிகா மனோஜ்ஜுக்கும் காதல் உருவாகிறது. இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதும், இஸ்லாமிய சட்டதிட்டங்களும், பொருளாதாரமும் இவர்களது வாழ்க்கையில் என்ன செய்தது? என்பது தான், ‘ஹபீபி’ திரைப்படத்தின் கதை.
‘ஹபீபி’ திரைப்படத்தின் இயக்குநர் மீரா கதிரவன் போற்றுதலுக்கும், பாராட்டுக்கும் உரியவர். தற்போதைய தமிழ் சினிமா உலகில், சமூக சீர்கேட்டுப் படங்களே மிக அதிகம். இவர் அதை முற்றிலும் தவிர்த்திருக்கிறார். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு எளிமையான குடும்ப, காதல் கதையை உணர்வு மேலோங்க, உணர்ச்சிகரமாக படமாக்கியிருக்கிறார். ஒரே சமூகத்தில், ஒரு ஜோடி பொருளாதாரத்தால் பிரிந்து வாழவேண்டிய சூழல். மற்றொரு ஜோடி சட்டத்திட்டத்தால் பிரிந்து வாழ வேண்டிய சூழல். இந்த இரண்டுமே குறிப்பிட்ட வரம்புக்குள், கண்ணியமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் மூத்த உறுப்பினராக இயக்குநர் கஸ்தூரிராஜா, ‘முஹம்மது யூசுப்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயல்பாகவே அந்த கதாபாத்திரத்தில் பொருந்திவிட்டதாக இருக்கிறார். தமிழ்சினிமாவுக்கு ஒரு நடிகரை அறிமுகப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் மீரா கதிரவன். அவரது மகனாக நடித்திருக்கும் ஈஷா முகம்மதுவும் நன்றாகவே நடித்திருக்கிறார். அவரது எல்லை மீறாக்காதல் மூலம், காதலியை ஒரு பெரிய அவலத்தில் இருந்து காப்பாற்றும் காட்சியில் படம் பார்ப்பவர்களின் கண்களை கசிய வைத்து விடுகிறார்.
நிலோபர் நிஷாவாக நடித்திருக்கும் மாளவிகா மனோஜ்ஜூம் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்துகிறார். அவரது கள்ளங்கபடமில்லாத முகத்துடன், காதலனை காப்பாற்றத்துடிக்கும் காட்சியிலும், க்ளைமாக்ஸில் காதலனை எதேச்சையாக சந்திக்கும் தருணத்திலும் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றபடி, தனஸ்ரீ , அனுஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள்குமார், ரேகா குமணன் , யூடியூபர் கைஜென் மலர் உள்ளிட்டோரும் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்துள்ளனர்.
சாம் சி எஸ், காட்சிகளுக்கேற்றபடி இசையமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு சிறப்பு.
இஸ்லாமிய குடும்பங்களின் வாழ்வியலையும், சமூக நெறிகளையும் முடிந்தவரை நியாயமாக, சில இடங்களில் வளைந்து கொடுத்தும் படமாக்கியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியே அதற்கு சாட்சி! இருந்தாலும், அனைவருக்குமான ஜீவனுள்ள காதல் திரைப்படத்தை, எல்லோரும் ரசிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார், இயக்குநர் மீரா கதிரவன்.
ஹபீபி – அன்பானவன்!












