‘90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ சார்பில், எஸ். ஜி.சரவணன், சுபா சரவணன் ஆகியோரது தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம், அருள்வான். இதில் அருள்நிதி, ஆரவ் , காளி வெங்கட், ரம்யா பாண்டியன், ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், அருள்தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கணேஷ் விநாயகன் எழுதி இயக்கியிருக்கிறார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
அருள்வான், மலைவாழ் பழங்குடியினரின் அடிப்படை, அத்தியாவசிய உரிமைகள் குறித்து பேசுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், காட்டை அழிக்காமல் அதனுடன் இயைந்து வாழும் ஒரு காடர் குழு. வனச் சரகர் (Forest Ranger) ஜான் விஜய்யின் சதியால் காடர் குழுத் தலைவர் தற்கொலை செய்து கொள்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஆரவ் அந்த குழுவின் தலைவராக பொறுப்பேற்கிறார். அவருக்கு ஒரு மகள். வனச்சரகரின் சதியில் இருந்து மீள்வதற்கு படிப்பு முக்கியமானது என்பதை அவரது தாத்தாவின் கொடூர மரணத்திற்கு பிறகு உணருகிறார். எப்படியாவது தானும் தன்னுடைய குடியைச்சேர்ந்தவர்களும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு காடர் இன மக்களின் சடங்கு சம்பிரதாயங்கள், மற்றும் பல தடைகள் ஏற்படுகிறது. அதை எதிர்த்து, தனி ஆளாக மாவட்ட ஆட்சியர் அருள்நிதியை சந்திக்க முயலுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், அருள்வான் படத்தின் கதை.

மலைவாழ் மக்களின் நியாயமான அடிப்படை, அத்தியாவசிய உரிமைகள் பற்றி பேசியதற்காக அருள்வான் படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனை பாராட்டலாம். இன்றைய நவீன உலகில் பல மலை வாழ் கிராம மக்கள் அவதி பட்டு வருவது கண்கூடான உண்மை. அந்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரசு சில நடவடிக்கைகளை எடுத்தாலும் அதிகாரிகள் மட்டத்தில் அது எவ்வாறு தடைபடுகிறது. என்பதை, அருள்நிதி ஏற்று நடித்த கலெக்டர் கதாபாத்திரம் மூலம் சொல்லியிருப்பது கடும் வருத்தத்தையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது. சடங்கு, சம்பிரதாயங்களில் சிக்கிக்கொள்ளும் அப்பாவி மலைவாழ் மக்கள் ஒரு பக்கம், பழக்கமில்லாத காட்டு வாழ்க்கையை ஏற்க தயங்கும் அதிகாரிகள் ஒரு பக்கம் என இரண்டு தரப்பினைரையும் சரி சமமாக காட்சிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அந்த மக்களுக்காக கலெக்டர் (அருள்நிதி) செய்யும் தியாகத்தை போல் பலரும் செய்ய முன் வந்தால், அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்!
திரைக்கதையும், காட்சிப்படுத்தலும் அரை குறையான ஆவணப்படத்தை பார்ப்பதை போன்று இருக்கிறது. அதை இன்னும் சுவாரசியமாகவும், அழுத்தமாகவும் செய்திருக்கலாம்.
தேனி மாவட்ட ஆட்சியர் முத்துவேல் கதாபாத்திரத்தில் அருள்நிதி. மிகையற்ற, குறை சொல்ல முடியாத நடிப்பு. ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார். காடர் இனத்தை சேர்ந்த மலைவாழ் இளைஞராக ஆரவ். ரசிகர்களிடையே ஒட்டாமலே வந்து செல்கிறார்.
ஆரவ்வின் மனைவியாக ரம்யா பாண்டியன். குறை சொல்ல முடியாத நடிப்பு.
பத்திரிக்கையாளராக காளி வெங்கட். அந்த மலைவாழ் மக்களுக்கும் பிரயோஜனமில்லை! திரைக்கதைக்கும்…
ஆரவ் – ரம்யா பாண்டியனின் மகளாக, குறிஞ்சி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பேபி கிருத்திகாவின் நடிப்பு சிறப்பு! முழுப்படத்தினையும் தாங்குகிறார்.
சமூகத்திற்கு தேவையான ஒரு கதையை, திரை வடிவில் ரசிகர்களிடத்தில் கொண்டு செல்வதில் இயக்குநராக கணேஷ் விநாயகன் பெரிதான அக்கறை காட்டவில்லையோ? என எண்ணத்தோன்றுகிறது!












