cinema murasam. kaala Review, Rating : 2 .5 / 5 .
‘காலா’ விமர்சனம்.
அறுபதைக் கடந்தவர்கள் மனைவியிடம் காட்டுகிற நேசத்திலும் சரி, முன்னாள் காதலியிடம் காட்டுகிற அன்பிலும் சரி இதமான தடவல் இருக்கும். நினைவுகள் சுகமாக இருக்கும். கூட்டிலிருந்து சற்று பறந்து சாரலில் சிறகுகள் நனைத்து செட்டையை செப்பனிடும் நேர்த்தி அடடா ,அஅடா! ரஜினியும் ஹியூமா குரேசியும் டின்னர் சாப்பிடும் அந்த பசுமையான காதல்!
மறக்க முடியுமா?
உமக்கு மட்டும்தான் காதலி இருப்பாளா?
“எனக்கொரு தப்படிக்கிற பெருமாள் இருக்கமாட்டாரா..போடு நெல்லைக்கு ஒரு டிக்கெட்டு .நானும் ஒரு பார்வை பார்த்துட்டு வாறன்” என பொய்யாக சிலிர்க்கிற மனைவி ஈஸ்வரி ராவை நைசாக சரிக்கட்டும் காலா கருப்பு ரஜினியின் சில்மிஷ சிரிப்பை மறக்கமுடியுமா? இருவருமே வாழ்ந்திருக்கிறார்கள்.
காலா படத்திலேயே நம்மை ரசனைக்குள் தள்ளி நனைக்கிற காட்சிகள் இவைதான்! எவ்வளவு இயல்பாக இருக்கிறது தெரியுமா?
கதைக்காக பா.ரஞ்சித் அதிகமாக மெனக்கெடவில்லை. ‘நாயகன்’ படத்தை அவர் தழுவியதாக சொல்ல மாட்டார். பார்த்துப் பழகிய நமது விழிகளுக்கு ‘ஜாடை’தெரிகிறது .புரிகிறது.
மும்பையை சுத்தப்படுத்துகிறேன் எனச்சொல்லி சேரி மக்களின் வாழ்விடங்களை அபகரித்து அடுக்கு வீடுகள் கட்டப் பார்க்கிறார் நானா படேகர். மும்பையின் சிவசேனா டைப் கேரக்டர். தாக்கரேக்கு புலி என்றால் படேகருக்கு சிங்கம். எங்கள் நிலம் எங்களுக்குத்தான் என்று நடக்கிறது நில உரிமைப் போராட்டம்.
ரஜினி-நானா படேகர் சந்திப்பு ரஞ்சித்தின் வசனத்தால் கவனம் ஈர்க்கிறது. “கேட்காம தாராவிக்குள்ள வந்துட்ட .என்னை கேட்காம எப்படி வெளியேற முடியும் “என படேகரை மிரட்டுகிற காலாவின் பேராண்மை பிரிதொரு காட்சியில் நீர்த்துப்போகிறது. நானாவின் வீட்டுக்குள் ரஜினியும் அவரும் செல்லும்போது ரஜினி மட்டும் காலணியை கழட்டி வாசலில் விடுவது ஏன்?
சமுத்திரக்கனியை இயக்குநர் வீணடித்திருக்கிறார். ஒரு குடிகார கைத்தடிக்கு அவர்தான் தேவையா?
போராட்டதை ரஜினி வலியுறுத்தும் காட்சிகளிலும் போலீஸ் அத்துமீறல் காட்சிகளிலும் ரஜினியை நினைத்து ரசிகர்கள் சிரிக்கிறார்கள். கலவரத்தை போலீசே தூண்டுவதும் பெண்ணை நிர்வாணப்படுத்துவதும் மெரினா-தூத்துக்குடி நிகழ்வுகள்.
அட்டக்கத்தி,மெட்ராஸ் படங்களை கொடுத்த ரஞ்சித் படமா இது? கபாலி 2 எடுக்க நினைத்தாரோ என்னவோ?
“வால்மீகிஅப்படித்தானே எழுதித் தொலைத்து விட்டான். கொன்னுதானே ஆகணும்” என்கிற நானா படேகரின் திமிரில் தமிழரின் மீதான எரிச்சல்! ,ராவணன் வழியாக வருகிறது. எப்படியெல்லாம் நம் மீதான வன்மம் வடவர்களுக்கு.!
சந்தோஷ் நாராயணின் இசை என சொல்லிக்கொள்ள முடியவில்லை. ஒளிப்பதிவாளர் முரளிக்கும், ஆர்ட் டைரக்டர் ராமலிங்கத்துக்கும் வாழ்த்துகள்.
சென்ட்ரல் ஸ்டேஷன் ரயில் நிலையத்து பிளாட்பாரத்தை விட இரட்டை மடங்கு நீளம் இருக்கிறது கிளைமாக்ஸ்! சலிப்பு.
எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி விட்டார்கள்.
cinema murasam Rating : 2 .5 / 5