ஜெய் ,வைபவி ,அதுல்யா, எஸ்.ஏ.சந்திரசேகர்.
நன்றி : காமசூத்ரா.
அந்த காலத்தில் சரோஜாதேவி புத்தகங்கள் என்கிற பெயரில் அதிக விலையில் குறைந்த பக்கங்களில் பச்சை ஆபாச புத்தகங்கள் வெளியாகின. அச்சிடுவதற்கும் விற்பனை செய்வதற்கும் போலீஸ் தடை இருந்த காரணத்தால் கடைக்காரர்கள் ஒளித்து வைத்து விற்பனை செய்வார்கள். பெங்களூர் விலாசமிட்டு உள்ளூர்காரர்களே அச்சிட்டு காசு பார்த்தார்கள்.
அந்த ஆபாச குப்பையை எழுதியவரின் பெயர் தியாகன் என்பதாக நினைவு. திராவிட எழுத்தாளர்களில் ஒருவர்… அருமையாக அரசியல் கட்டுரைகள் எழுதக்கூடியவர்..காசுக்காக தனது எழுத்தாற்றலை பச்சை ஆபாசத்தில் நனைத்து எழுதுகிற அளவுக்கு வறுமையின் வசம் சிக்கியிருந்தார்.
எதிர்கால அரசியல் தலைவர் என்கிற நம்பிக்கையில் சதுரங்க காய்களை நகர்த்திவரும் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு என்ன வந்தது?.
பிரபல இயக்குநர்களில் இவரும் ஒருவர்.அண்மையில் இவர் இயக்கிய படமெல்லாம் தோல்வியைத் தழுவியதாலோ என்னவோ மலிவான நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்.
இவரது அனுபவம்,திறமை,வயது,முதிர்ச்சிக்கு ‘கேப்மாரி ‘படம் தேவை தானா? அதுவும் இதுதான் கடைசிப் படமாம். இவரது சாதனைகளை கேப்மாரி படத்தின் வழியாக கருப்பு கட்டத்துக்குள் அடைத்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
வளர வேண்டிய ஹீரோவை முட்டுச்சந்துக்குள் விட்டு சாத்து சாத்து என்று அடித்து நொறுக்கியிருக்கிறார் என்கிற கவலையும் இருக்கிறது. நாடு முழுவதும் பாலியல் வன்முறைகள், கூட்டுக் கற்பழிப்பு ,பச்சிளம் பிள்ளைகளையும் விட்டு வைக்காத வன்முறைகள் என மலிந்து கிடக்கிற நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில்,இன்னும் சொல்லப்போனால் ஊக்கம் அளிக்கிற வகையில் கேப்மாரி படம் அமைந்திருக்கிறது.
மது,போதை, கட்டுப்பாடில்லாத பாலியல் புணர்வு என கதை முழுவதும் எஸ்.ஏ.சி.கை வரிசை காட்டியிருக்கிறார்.
சாப்ட்வெர் கம்பெனியில் வேலை ஜெய்க்கு. அவர் ரயிலில் பயணிக்கும் போது சக பயணி வைபவிக்கு பீர் கொடுக்கிறார் . இருவரும் போதையில் தம் நிலை மறந்து உடலால் இணைகிறார்கள். அடடா என்னே கற்பனை செழுமை.!
2 வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கிறார்கள். பீர் எபெக்ட்.இருவரும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.தனி வீட்டில் வாழ்க்கை. ஜெய்யின் ஆபிசில் வேலை பார்க்கிற அதுல்யாவுக்கு ஜெய் மீது ஒருதலைக்காதல். அதனால் என்ன அவர்களை பீர் உடலால் இணைக்கிறது. அதுல்யா கர்ப்பம் .அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இரட்டை அர்த்த வசனங்கள்,ஆபாச தோற்றம், என குடும்பத்தினர் குழந்தைகளுடன் பார்க்க முடியாத காட்சிகள் என தணிக்கையாளர்களின் அடல்ட்ஸ் ஒன்லி அடையாளத்துடன் படத்தை ஓட்டுகிறார்கள்.
இது தமிழ் நாட்டின் சாபக்கேடு.
கேப்மாரி–குப்பைலாரி.