கதை ; ரென்சில் டிசில்வா ,சமீர் அரோரா, திரைக்கதை : ஜீத்து ஜோசப் ,ரென்சில் டிசில்வா ,சமீர் அரோரா, மணி கண்டன் .இசை : கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு ;ஆர்.டி. ராஜசேகர் ,
கார்த்தி,சத்யராஜ்,ஜோதிகா ,சீதா ,நிகிலா விமல் ,பாலா,இளவரசு, சவுகார் ஜானகி ,மாஸ்டர் அஸ்வந்த் .
*********
விடுமுறை கால வெளியீடு .
காணாமல் போன தம்பியாக கார்த்தி ஊட்டி அரசியல்வாதி சத்யராஜ் வீட்டுக்கு வந்து சேருகிறார். அனுதாப ஓட்டில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கும் சத்யராஜை ஊட்டி மலைவாழ் மக்கள் நம்புகிறார்கள். தங்களுடைய இருப்பிடம் இடிக்கப்படாமல் பாதுகாப்புடன் இருப்பதற்கு அவர் ஒரு காரணமாக இருப்பதால்.
ஆனால் அவர் உண்மையான அரசியல்வாதியா? மலைவாழ் மக்கள் வீடுகள் இடிபடாமல் இருப்பதற்கு உண்மையான காரணம் என்ன? தம்பியாக வந்து சேர்ந்த கார்த்தி உண்மையாகவே அந்த வீட்டுப் பிள்ளைதானா? அவர் யார்? நடைபெறும் கொலைகளுக்கு சத்யராஜ் காரணமா,அல்லது பாலா,காரணமா? கோவா போலீஸ் அதிகாரி இளவரசு சுட்டுக்கொல்லப்பட்டதற்கு இயக்குநர் சொல்கிற நீதி என்ன?
இதையெல்லாம் கோர்வையுடன் தம்பி சொல்கிறானா ?
ஜீத்து ஜோசப் அவருடைய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்.ஆனால் பாபநாசம் படத்தை ஒப்பீடு செய்கிறபோது …?
சத்யராஜ்க்கு இது முக்கியமான படம். எல்லாம் தெரிந்திருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒன்றும் தெரியாதவரைப் போல காட்டியாக வேண்டும்.விளையாடுவதற்கு வசதியான கேரக்டர். நல்லவரா கெட்டவரா என புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு காட்சிகளில் பின்னியிருக்கிறார்
கார்த்தியின் கண்ணோட்டத்தில் ஒரு மாதிரியாக ,இளவரசு பார்வையில் ஒரு மாதிரியாக ,சவுகார் ஜானகி பாட்டியின் அணுகுமுறை வேறு மாதிரியாக என கதையை கொண்டு சென்றிருக்கிறார்கள். கஷ்டப்பட்டுத்தான் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். ஜோதிகாவின் துப்பாக்கி கார்த்தியின் பிடரிக்கு குறி வைக்கும் வரை அக்காவின் காரக்டரை சஸ்பென்ஸுடன் கொண்டு சென்றதுக்கு பாராட்டு .
சுட்டுக் கொல்லப்பட்ட இளவரசுவை அம்போவென டிக்கியில் போட்டு விட்டு தப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள் கதாசிரியர்கள்.
இந்த கதையில் சத்யராஜ்,கார்த்தி,ஜோதிகா மூவரும் எங்கெல்லாம் சிக்ஸர் அடிக்கவேண்டும் என்பதை அறிந்து பந்தை தூக்கி இருக்கிறார்கள். கோவாவில் குறும்புத் தனமான கெய்டாக வாழ்கிற கார்த்தி ,15 ஆண்டுகளுக்கு முன்னர் காணமால் போன தம்பியாக ஊட்டிக்கு திரும்பியதும் அடுத்தடுத்து டுவிஸ்ட்டுகள்தான். தம்பியாக அவர் மாறுவதற்கு அவர் படும் பாடு ,நிகிலா விமலை பயன்படுத்திக் கொண்டு தம்பியின் குணத்தை அறிந்து கொள்ள காய் நகர்த்தும் பாங்கு எல்லாமே இயல்பாக இருக்கிறது.
தன்னை’தம்பி சரவணன் இல்லை என்பதாக தெரிந்து கொண்ட சவுகார் ஜானகியை மிரட்டுவதெல்லாம் கார்த்தியின் எக்ஸ்டிரா பாயிண்ட்ஸ். கைதிக்கு பின்னர் வந்திருக்கிற தம்பியில் கார்த்தி நம்மை ஏமாற்றவில்லை.
உண்மையான தம்பி கொலை செய்யப்பட்டுவிட்டான் என்கிற உண்மை சத்யராஜ்,ஜோதிகா இருவருக்குமே தெரிந்திருந்தும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அன்பின் வசப்படுவதுதான் கதையின் சிறப்பு அம்சம். கிளைமாக்ஸ் நெருக்கத்தில் கதையில் பாய்ச்சல் அதிகம்.
நம்மை திக் திக் மூடுடன் வைப்பதற்காக பல கேரக்டர்களை இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். பெராடியின் நம்பர் டு கேரக்டரும் அந்த வகையானதுதான்.!
மாஸ்டர் அஸ்வந்த் நல்ல கேரக்டர்.அவனது மறைவு ஜோ,கார்த்தி இருவரையுமே உலுக்கி எடுத்து விட்டது. ஜோவின் அக்கா கேரக்டர் நம்மை கலங்கடிப்பது கடைசிக் கட்டத்தில்தான்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடலை விட பின்னணி இசைதான் பேசப்படும்.குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்பதில் சந்தேகம் இல்லை.
தம்பிக்கு சினிமா முரசம் தருகிற மார்க் 3 / 5