சீனாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினையும், மிகப்பெரிய அச்சு றுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ள சீன அரசு, இதுவரை வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் 12 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவில் உள்ள உகான் நகரில் சிக்கிய 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சிறப்பு மருத்துவ முகாம்களில், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.அவர்களுக்கு கொரானோ வைரஸ் தாக்குதல் உள்ளதா என மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் சீனாவின் வுகான் பகுதியில் இருந்து 323 இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. இவ் விமானத்தில் மாலத்தீவை சேர்ந்த 7 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.












