விஜய்யும், விஜய் சேதுபதியும் நாயகன், வில்லன். மாளவிகா மோகனன் ,ஆண்ட்ரியா இருவரும் கொடுத்த கேரக்டர்களை பில் அப் பண்ணுகிறார்கள்.
சாந்தனு பாக்யராஜ், அர்ஜூன் தாஸ், கெளரி ஜி.கிஷன், அழகம்பெருமாள், ஸ்ரீமன், ஸ்ரீநாத், சஞ்சீவ், தீனா. ரம்யா சுப்ரமணியன், சாய் தீனா, பூவையார் இன்னும் சிலர் துணை கிரகங்கள். மூன்று மணி நேரத்தை கடத்துவதற்கு பயன்படுகிறார்கள்.
கதை என்ன ? வழக்கமான ‘சேம் ஃபார்முலா.’
நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் நடக்கின்ற அதே முட்டல் ,மோதல்.. சண்டை.. போர்..
நாகர்கோவில் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான் ‘பவானி’. அங்கேயும் தொடர்ந்து அவனுக்கு டார்ச்சர்கள் கொடுக்கப்பட, மனதளவில் சக்தி வாய்ந்த கெட்டவனாக உருவாகிறான். அந்த உலக மகா கெட்டவர்தான் விஜயசேதுபதி
லோக்கல் போலீஸ் சினிமா இலக்கணப்படி,தமிழ்நாட்டு மரபுப் படியும் பவானியின் கைக்குள்.! நாகர்கோவில் ரவுடி ராஜா. நடிப்பிலும் இவர்தான் இந்த படத்தின் சக்கரவர்த்தி விஜயசேதுபதி. பல இடங்களில் விஜய்யை ஈசியாக ஓவர் டேக் பண்ணிவிடுகிறார்.
சென்னையில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் ஜான் என்கிற விஜய், அந்தக் கல்லூரியில் அனைத்து மாணவர்களின் அபிமானத்தைப் பெற்றவராக இருக்கிறார்.மாணவர் பேரவைத்தேர்தல் வேண்டும் என்கிற மாணவர்களுக்கு ஆதரவாக வாதிடுகிறவர்.
ஆனால் தேர்தல் அமைதியாக நடக்காமல் அடிதடியில் முடிகிறது. இதனால் அந்த கல்லூரியை விட்டு வெளியேறுகிற விஜய்க்கு பேராசிரியை மாளவிகா மோகனனின் உதவியில் நாகர்கோவில் சீர்திருத்தப்பள்ளியில் வேலை கிடைக்கிறது.
அங்கே இருக்கிற சின்னப் பசங்களை வைத்து கஞ்சா, அபின் என்று போதைப் பொருட்களை விற்கிறார் விஜய் சேதுபதி.
நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த விஜய் அங்கேயிருக்கும் சூழலை அறிந்து கொள்ளாமல் சதா குடியும், தூக்கமுமாக வாழ்க்கையைக் கழிக்கிறார். அவர்தான் தங்களைக் காப்பாற்றுவார் என்று காத்திருக்கும் இரண்டு சிறுவர்கள் விஜய் சேதுபதியால் கொல்லப்பட.. அந்த நேரத்தில்தான் விஜய் முழித்துக் கொள்கிறார்.ஞானம் பிறக்கிறது.
மாணவர்களை சீரழிக்கிற விஜய்சேதுபதியை ஒழிக்கவேண்டும் என்கிற முனைப்புடன் செயல்படுகிற விஜய்க்கு பதிலுக்குப் பதில் என பதிலடி கொடுக்கிறார் சேதுபதி..
இப்படி எதிரெதிராக சந்திக்கிற இருவரில் யார் ஜெயிப்பார்கள் ?
விஜய்தான் வெற்றி பெற முடியும்.! அதுதானே தர்மம்.!!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெற்றிகரமாக செய்திருக்கிறார். இதற்காக மூன்று மணி நேரம் எடுத்திருக்கிறார்.
எல்லா கேரக்டர்களுக்கும் நியாயம் செய்ய வேண்டும் என்று நினைத்து தொங்கு சதைகளுக்கெல்லாம் சீன் அமைத்திருப்பது கொடுமை சார்!
ஆண்ட்ரியா எதுக்கு? புரியலீங்க. அந்த கேரக்டர் எந்த அளவுக்கு கதையை தூக்கிப் பிடித்திருக்கிறது?போங்க சார்.!
.விஜய்யின் பெரிய பிளஸ் பாயிண்ட் இளமையான தோற்றம்தான். அதை அப்படியே மெயின்டெயின் செய்திருக்கிறார். ரசிகர்களுக்கான மெனக்கெடல் படம் முழுவதும் இருக்கிறது.
பவானிவிஜய்சேதுபதியின் நோக்கத்தை பள்ளி சிறுவர்களிடத்தில் சொல்லிப் புரிய வைக்கின்ற காட்சியில் நடிப்பைக் காட்டியிருக்கிறார் தன்னுடைய மாணவர்களை விரட்டிவிரட்டி கொலை செய்யும் காட்சிகள் லைவ்வாக போனில் கிடைக்கும்போதும் அவரது கதறலான நடிப்பை ரசிக்க முடிகிறது.
நக்கல் , கிண்டல் செய்தபடியும் அனைத்துவித ஸ்டைல்களையும் காட்டி அவரது ரசிகர்களைத் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதியுடன் நேருக்கு நேர் மோதும்போது என்னதான் ஹீரோ என்றாலும் விஜய் சேதுபதியின் டயலாக் டெலிவரிக்கு முன்பு விஜய் காணாமல் போய் விடுகிறார் .வசனமும் சேதுபதிக்கென எழுதப்பட்டிருக்கிறது.தூக்கி சாப்பிட்டு விட்டார். சேதுபதியின் ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.
“உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள என்னைக் கொலை பண்ணிட்டு தப்பிச்சுப் போயிருங்க…” என்று ஒவ்வொரு கொலைக்கு முன்பாகவும் அவர் சொல்லும் வசனம், தியேட்டரில் விஜய் ரசிகர்களும் கைதட்டுகிறார்கள்.
அர்ஜூன் தாஸுக்கு ஓசி குரல் கொடுத்தவர் யார் என்று தெரியவில்லை. பொருந்தவில்லை.
விஜய்யின் படத்தில் கமர்ஷியலுக்காக பல மீறல்கள் இருக்கும். இதிலும் இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இனியாவது ஹீரோவுக்காக கதை பண்ணாமல் இருக்க வேண்டும்!
மாஸ்டர் —சுமார்தான்!