அண்மையில் பார்த்த படங்களில் மென்மையான மன வருடலுடன் நான் வெளிவந்தது ‘அன்பிற்கினியாள் ‘திரைப்படத்தில்தான்.!
தலைப்பிலேயே ஈர்ப்பு. அழகுத் தமிழ். படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியனின் பெயரும் அதுதான்.
அப்பா-மகள் பாசம்தான். என்றாலும் இது வித்தியாசமான களம் .
காரணம் கடவுளின் தேசத்திலிருந்து கதை இறக்குமதி செய்யப்பட்டதால் இருக்கலாம். மலையாளிகளின் ரசனை உயர்வு,படைப்பாளிகளின் வேறுபட்ட சிந்தனை,புதுமை வேகம். நமக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் .
ஹெலன் என்கிற மலையாளப்படத்தில் அன்னா பென் நடித்திருந்த கேரக்டரில் கீர்த்தி பாண்டியனும் ,லால் நடித்திருந்த வேடத்தில் அருண்பாண்டியனும் நடித்திருக்கிறார்கள்.
ஹெலன் படத்தை ஐ.வி.சசியின் மகன் அனிலும் தமிழில் தீனி என்கிற பெயரில் தழுவி படம் செய்து ஓடிடி தளத்தில் வெளியிட்டிருந்தார்.தியேட்டரில் அமர்ந்திருந்ததே தண்டம் என்றாகிப்போனது.
ஆனால் ‘அன்பிற்கினியாள் ‘உள்ளத்தைப் பிசைந்து விட்டது. அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாம். உருக வைத்து விட்டார். மலையாளத்து அன்னா பென்னை நகலெடுக்காமல் தன்னையும் ,திறமையையும் நம்பி பார்வையாளர்களை கவர்ந்திழுத்திருப்பது தமிழ்த் திரை வானில் இவருக்கென ஒரு இடத்தை முன்பதிவு செய்திருக்கிறது.
ஃப்ரீசர் யூனிட்டில் சிக்கிக்கொண்ட பிறகு கீர்த்தி படுகிற துயரம் ,அனுபவிக்கிற வலி நம்மை வெகுவாகவே பாதிக்கிறது. 12 டிகிரி ஏசி குளிரையே நம்மால் இரண்டு மணிநேரம் தாக்குப்பிடிப்பது இயலாத காரியம். கை ,கால் மறத்து ,விறைத்துப் போய் மூக்கிலும் ரத்தம் வழிகிறது.,அழுத கண்ணீரும் கன்னத்திலேயே உறைபனியாய் இருக்கிறது. அத்தகைய மைனஸ் டிகிரி உறை பனிக்குளிரில் உயிர் போகிற அந்த உணர்வை வெளிப்படுத்திய பாங்கு …உங்களால் யோசிக்க முடிகிறதா?
அந்த சித்திரவதையை கீர்த்தி பாண்டியன் வெளிப்படுத்திய அளவு ..இங்கு வேறு எவரால் ? சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
அத்தகைய திறமைசாலிகள் என்றோ வெளியேறிவிட்டார்கள் .அருண்பாண்டியனின் குடும்பத்திலிருந்து வந்திருக்கிற நம்பிக்கை நட்சத்திரம் கீர்த்தி பாண்டியன்…
சாதி வெறியை சாய்ப்பதற்கு காதலைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை கதை ஓட்டத்துடன் சொல்லியிருப்பது இயக்குநரின் திறமை.மகள் அன்பிற்கினியாளின் சிநேகிதியும் கூட தன்னுடைய சமூகம் சார்ந்தவளாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிற அப்பா அருண்பாண்டியனுக்கு அவள் நேசிப்பது சார்லஸ் செபாஸ்டினாக இருப்பது , ,வெறுப்பாகுமா ?பாருங்கள் கதை என்ன சொல்கிறது என்பதை?
கோகுல் ,ஜான் மகேந்திரன் இருவரில் எவர் எழுதியிருந்தாலும் வாழ்த்துக்குரிய வசனகர்த்தாக்கள். சமூகம் சார்ந்த வசனங்களை படத்தில் இணைப்பதற்கு தயாரிப்பாளர்கள் அஞ்சுகிற காலத்தில் சுளுக்கு எடுப்பதுபோல வசனங்கள் இருப்பது வரவேற்புக்குரியது. தவறுகளை சுட்டியதும் கண்டித்ததும் கண்ணியத்துடன் இருந்தன.
சில படங்களில் சாதியாளர்களை தம் வசப்படுத்துவதற்காகவே வசனங்கள் எழுதப் படுகின்றன.இதை வருத்தமுடன் பதிவு செய்யவேண்டியது கடமை.
கைதிக்கு இருக்கிற அளவுக்கு இரக்கம் இல்லாத அரக்க குணம் படைத்த சிலரும் காக்கி சட்டைக்குள் இருக்கிறார்கள் என்பதை எஸ்.ஐ .ரவீந்திரன் வழியாக காட்டியிருக்கிறார் இயக்குநர் .
மால் சிக்கன் ஷாப் மானேஜருக்கு உள்ளே ஆள் இருப்பது தெரிந்தும் ,தெரியாததுபோல் ஃப் ரீசர் அறையை மூடி செல்வது அவரின் விரக்தி ,எரிச்சலின் விளைவு. நல்ல கேரக்டர்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவினைப்போல ஜாவித் ரியாஸை சொல்ல முடியவில்லை. இசை சுமார்தான்.
அருண்பாண்டியன் என்னவாக வருகிறார்?
அப்பாவாக நடித்திருக்கிறார்.
குடும்பத்துடன் பாருங்கள் என்று சினிமா முரசம் பரிந்துரைக்கிறது.
1