
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வருகிற படம் ‘டான்’ .
தற்போது கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.. ஆனைமலையை அடுத்த முக்கோணம் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருந்தார் .
இதனால் படப்பிடிப்பை காண்பதற்காக ஊர் ஜனங்கள் கூடி விட்டார்கள். சுற்று வட்டார மக்களும் வந்து விட்டனர். இதனால் சமூக இடைவெளி என்பது இல்லாது போயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக கொரானா போய்க்கொண்டிருப்பதாக கூறி வருகிற நிலையில் இப்படி நெறுக்கியடித்துக்கொண்டு நின்றால் கொரானா தொற்றுகிற அபாயம் வருமல்லவா!
யாரோ சொன்னபிறகுதானே சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பது வழக்கம். தகவல் அறிந்த ஆனைமலை போலீசார், வட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு கூடியிருந்த பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
விசாரணையில், படக்குழுவினர் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தி வந்தது தெரியவந்தது. அப்படிப்போடு! படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்த ஆனைமலை போலீசார், படக்குழுவினருக்கு ரூ.19,400 அபராதம் விதித்துள்ளனர்.












