கதை இயக்கம்.: வினீத் வரபிரசாத் . இசை: பிரிட்டோ மைக்கேல்.ஒளிப்பதிவு: எஸ்.யுவா.
கவின்.(குரு பிரசாத்.) அம்ரிதா ( ஹரிணி ) கிரண் கொண்டா .( சுந்தர்.)
################
பேய்ப்படம் என்றால் எங்கேயாவது வெள்ளையாக புகை வடிவில் அரூபத்தை காட்டுவார்கள். பலவிதமாக யார் மீதாவது ஏறி அந்த வீட்டை அதகளப்படுத்திவிடும். லாரன்ஸ் மாஸ்டர்தான் பலவிதமான ஆவி ,பேய்களுடன் வாழ்ந்து கோலிவுட்டுக்கு சாம்பிளாக இருக்கிறார்.
ஆனால் எந்த உருவத்தையும் காட்டாமல் ஒளிப்பதிவிலும் ,பின்னணி இசையிலும் ‘காட்டி’ மிரட்டி இருக்கிறார்கள் இசை அமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் ,ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா இருவரும் !
பொதுவாக கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் என்பார்கள் .அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். மன உளைச்சலுக்கு உள்ளானவர்களும் உண்டு. இங்கே சதி வேலைகளும் நடக்கும்..பல கார்ப்பரேட் நிறுவனங்களை மூடிவிட்டு பிற தொழிலை நாடிய லெக் தாதாகளும் உண்டு. அப்படி ஒரு லெக் தாதாவாக கிரண் கொண்டா .இவரது சூழ்ச்சிக்கு இரையாகும் மணமக்கள்தான் அந்த ஒன்பது மாடி கட்டிடத்தில் கண்ணுக்கு தெரியாத ஆவிகள்.!
வினீத் வரபிரசாத்தின் மர்ம முடிச்சுகள் உள்ள திரைக்கதையும் ,ஒளிப்பதிவு ,இசை இரண்டின் கலவையும் கதையோட்டத்துக்கு துணையாக இருக்கின்றன. உயிரில்லாத லிப்ட்டிற்கு உயிர் கொடுத்து கதையின் நாயகனாக ஏறி இறங்க வைத்திருக்கிறார் வினீத் .
கவின் ஓவர் டைம் வேலை பார்த்து மாட்டிக்கொள்கிறார் .எச்ஆர் அம்ரிதா டாக்குமென்ட் அறையில் மாட்டவைக்கப்படுகிறார்.இவர்களிருவரும்தான் ஒன்றாக ஆவியிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் காட்சி ,தப்பித்து செல்கிறபோது ஏற்படுகிற சந்தேகங்கள் சரியாக பின்னப்பட்டுள்ளன.இயக்குநருக்கு பாராட்டுகள்.!
பிக்பாஸில் பார்த்த செழுமையான கவினை பார்க்க முடியவில்லை. கதையின் நாயகனான கவின் இளைத்து காணப்பட்டாலும் நடிப்பதில் சளைக்கவில்லை. .அம்ரிதாவும் நடிப்பதில் அவரை போலவே.!
ஓடிடி தளத்தில் வந்தாலும் ஆபாசம் இல்லை.அருவெறுப்பான வசனங்கள் இல்லை .!
லிப்ட்டை நம்பலாம்.ரசிக்கலாம்.!