விக்ருதி என்கிற பெயரில் வெளியான மலையாள மொழித் திரைப்படம்தான் ‘பயணிகள் கவனிக்கவும்.’
ஆகா ஓடிடி தளத்திற்காக விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிற படம்.
விதார்த் நாயகன்.மற்றும் கருணாகரன் ,லட்சுமி பிரியா சந்திரமவுலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு எஸ்.பாண்டி குமார்,இசை சாம்னாத் நாக் ,இயக்கம் எஸ்.பி.சக்திவேல்.
சோசியல் மீடியாவில் பகிரப்படும் செய்திகளும் படங்களும் எம்மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்பதை ஆதாரமாக வைத்து புனையப்பட்ட கதை.
விதார்த் மாறுபட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார்.வாய் பேசாத காது கேளாத கேரக்டர் .மிக மிக இயல்பாக நடித்திருக்கிறார் .வார்த்தைகள் வெளிவராத வகையில் நாசிக் குழாயும் ,பேச்சுக் குழாயும் அடைத்துக் கொள்ள சிதறுண்டு வெளிவரும் ஓசையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.அற்புதமான நடிப்பு.
இவரது மனைவியாக வருகிற லட்சுமி சந்திரமவுலியும் விதார்த்தைப் போல மாற்றுத் திறனாளிதான்.இந்த தம்பதிகளுக்கு ஆண் ,பெண் என இரு பிள்ளைகள்.பெண்ணுக்கு நிமோனியா காய்ச்சல் .இரண்டு நாள் மருத்துவ மனையில் தங்கி மகளை கவனித்துக் கொண்ட விதார்த் மெட்ரோ ரெயிலில் வீடு திரும்புகிறபோது அசதியில் தூங்கி விடுகிறார்.
அதே ரெயிலில் பயணிக்கிற கருணாகரன் அசதியில் தூங்குகிற விதார்த்தை செல் போனில் படம் பிடித்து சோசியல் மீடியாவில் வெளியிட கதை வேறு பக்கமாக திரும்புகிறது.
விதார்த் குடிபோதையில் தூங்குவதாக நினைத்து சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். பிற பயணிகளுக்கு இடைஞ்சல் தருகிற வகையில் இருக்கிறது என அவரவர் பதிவுகளில் வெளியிட அந்த படம் வைரலாகிறது. விதார்த்தின் வேலையும் காலியாகிறது.
அப்பாவியான விதார்த்துக்கு குடிகார பட்டம்.இழிச்சொல் .வாய் பேச இயலாத அந்த மனிதன் என்ன ஆகிறார் ,எத்தகைய மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் என்பதை சொல்லியிருக்கிறார்கள். மனிதாபிமானத்துடன் ஒரு மாற்றுத்திறனாளியின் வலியை இயக்குநர் சக்திவேல் சிறப்புடன் சொல்லியிருக்கிறார்.நடித்திருப்பவர் எல்லோருமே கேரக்டரை உணர்ந்து கேரக்டரை உயிர்ப்பித்திருக்கிறார்கள்.
என்ன இந்த படம் ஓடிடி யில் வெளியாகி இருக்கிறது.
தியேட்டர்காரர்களுக்கு டாப் ஆர்ட்டிஸ்ட் நடித்திருந்தால் போட்டியிட்டுக்கொண்டு வாங்கி இருப்பார்கள். சின்னப்படங்களை ஆதரியுங்கள் என்று மேடைகளில் முழங்குகிறவர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்.?
சோசியல் மீடியாவை கருணாகரன் தவறாக பயன்படுத்திக்கொண்டதின் விளைவு விதாரத்திற்கு மன உளைச்சல் ! கருணாகரனுக்கே வினை வைக்கும் அளவுக்கு பூமராங் மாதிரி பிரச்னை வருகிறது. அற்புதமாக சிந்திக்கிறார்கள் கேரளத்து படைப்பாளிகள்.!
முன்னணி நடிகர்கள் பட்டியலில் விதார்த் இருக்கிறாரா இல்லையா என்பதை அலசி பார்க்காமல் இவரளவுக்கு வேறு எவரும் இயல்பாக நடித்ததில்லை என்பதை மனதில் கொண்டு விருதுகளை கவுரவிக்க வேண்டும்.
கருணாகரனும் சிறப்புடன் நடித்திருக்கிறார். குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிற காட்சியில் ‘மனிதம்’தலைநிமிர்ந்து நிற்கிறது.
சிறப்பான படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.












