பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி காலமானார்!
தமிழில் செந்தமிழ்த் தேன்மொழியாள், யாரடி நீ மோகினி போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடி, தன் காந்தக் குரலால் தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களைக் கட்டிப்போட்ட பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி (வயது 88,) வயது மூப்பு காரணமாகப் பெங்களூரில் நேற்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவு தென்னிந்திய திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜமுனா ராணியின் இறுதிச்சடங்குகள் இன்று மதியம் கல்லஹள்ளி பகுதியில் நடந்தது . இசை உலகிற்குத் தீராத இழப்பை ஏற்படுத்தியுள்ள இவரது மறைவிற்குத் திரை பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான இசை ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வரதராஜுலு – திரௌபதி தம்பதியினருக்கு 1938 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் ஜமுனா ராணி. இவரது தாயார் திரௌபதி சிறந்த வீணை இசைக் கலைஞராவார். முழுக்க பெண்களை மட்டுமே கொண்ட வாத்தியக் குழுவை நடத்தி வந்த தன் தாயாரின் வழிகாட்டலில், 7 வயதிலேயே பாடும் வாய்ப்பைப் பெற்றார் ஜமுனா ராணி.
சித்தூர் நாகய்யாவின் ‘தியாகய்யா’ தெலுங்குப் படத்தில் அறிமுகமான இவர், தமிழில் 1952-ம் ஆண்டு வெளியான ‘கல்யாணி’ திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான ஜமுனா ராணி, ‘காளை வயசு கட்டான சைசு’, ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘சின்னச் சின்ன சிட்டு’, ‘காவேரி தாயே’, ‘யாரடி நீ மோகினி’, ‘குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’, ‘மாமா.மாமா’ உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது அழுத்தமான தமிழ் உச்சரிப்பிற்காகவே இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.அதோடுமட்டுமில்லாமல் தாரா தாரா வந்தாரா, காளை வயசு கட்டான சைசு, பாட்டொன்று கேட்டேன், செந்தமிழ்த் தேன்மொழியாள், யாரடி நீ மோகினி என மெல்லிசைப் பாடல்களில் மயக்கிய இவர், ஜி.ராமநாதன் இசையில் ‘உத்தம புத்திரன்’ படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் ஜிக்கியுடன் இணைந்து பாடிய, ‘யாரடி நீ மோகினி’ பாடலில் அதிரடி காட்டியிருப்பார். அதுமட்டுமின்றி, இளையராஜாவின் இசையில் கமல்ஹாசனின் நாயகன் படத்தில் வரும் ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றியதும் இவர்தான்.