இரவின் நிழல்.
இரவே கருமைதான்.அதன் நிழல் மட்டும் வெளிச்சமாகவா இருக்கமுடியும்.? கதாசிரியர்கள் சொல்வதைப்போல நிழலும் கும்மிருட்டாகத்தான் இருக்க முடியும்!
வாழ்வுக்காக உடலை விற்கிற பெண்ணின் பிணத்தின் மீது காயப்பட்ட மார்புக் காம்பில் பால் அருந்த முற்படுகிற பாலகனின் கதை இது என்பதால் இரவின் நிழல் எனப் பெயரிட்டாரோ ,என்னவோ?
வணிகத்தின் வருவாயை ஐந்தொகை கணக்கிட்டு பார்க்கிற சினிமாவில் புதுமைக்கு இடம் இல்லை. தங்களை மாஸ் தலைவர்களாக எண்ணிக்கொண்டு ரசிகர்கள் மீது குதிரை ஏறுகிற நடிகர்களுக்கும் சினிமா ஒரு வியாபாரமே.!
ஆனால் பார்த்திபன் மட்டும் புதுமை ,புரட்சி ,சாதனை என வித்தியாசமான பாதையில் பயணிப்பதேன்? அவர் திரையுலக விஞ்ஞானி. கலைஞானி கமல்ஹாசனைப்போல.! ஆனால் இருவருமே புதுமையை நோக்கி அவரவர் பாதையில் பயணிப்பவர்கள்.
பார்த்திபனுக்கு தமிழ்த் திரையுலகம் போதிய உதவிகளை ,வாய்ப்புகளை வழங்கத் தவறியதால் தான் 1,36228 பிரேம்ஸ் ,50 செட் ,75 ஏக்கர் ,ஒத்திகைக்காக 90 நாட்கள் என தன்னையே வருத்திக்கொண்டு ஓ எம்.ஆர் சாலையில் இரவின் நிழலில் வாழ்ந்திருக்கிறார். வாழ்த்தும் கடமை எமக்குண்டு.தமிழர்க்கும் இருக்கிறது.தமிழர் அரசுக்கும் உரிமை இருக்கிறது.

ஆனால் எழுதியபோதே காகிதத்திலேயே எடிட் செய்து விட்டதால்” நான் -லீனியர் “இதற்கு தேவையில்லை. ஆனால் இவ்விதம் படம் எடுப்பது கடல் மீது ஹடயோகம் செய்வதைப்போல.!பார்த்திபனுக்கு மட்டுமே சாத்தியப்படும். சாத்தியப்பட்டிருக்கிறது.!
ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன் ,ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்,இசை அமைப்பாளர் ஏஆர் ரகுமான் ,பார்த்திபன் ஆகிய நால்வரும் உலக அளவில் உயர்ந்த இடத்தில் அமர வேண்டியவர்கள்.
சீரணி அரங்கம் இருந்த காலத்தில் நிகழ்ந்த கதை.
அந்த அரங்கத்தின் இருளில் ஹோமோ பிரியனிடம் ஒத்த ரூபாய்க்காக தனது ‘கற்பினை’ இழந்த ( புரிந்து கொண்டிருப்பீர்கள்.) பையன் நந்து வளர்ந்து ஆளாகி சினிமா பைனான்சியர் ஆகும் வரை அவன் பலதரப்பட்ட பாவிகளை சந்திக்கிறான். அதில் ஒரு நரகம் தான் இந்து மத போலி சாமியாரின் காலைக் கழுவி தீர்த்தம் அருந்துகிற வேடம். அத்தகைய கேரக்டரை பார்த்திபனைப் போல வெளிப்படுத்த ஒரு எம்.ஆர்.ராதா வேண்டும்.! சும்மா சொல்லக்கூடாது ரோபோ சங்கரை.!
“உன்னால்தான் என் வயிறு ரொப்பி விட்டது “என்று குழந்தை சமாசாரத்தை வரலட்சுமி சரத்குமார் சொல்ல, மிகவும் எளிதாக அந்த காட்சியை கடக்கிறார் ரோபோ “கவசக் குறைவு.!”
தனது வாய்ஸை முன்னிறுத்தி மூன்று பார்த்திபன்களை ( ஸ்ரீ வள்ளி வேலன் ,வேடன் ,விருத்தன் போல.)உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.அவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கஞ்சா உலகில் கவலைகளை மறந்து இன்பலோகத்தில் மிதக்கிறவர்களை காட்டியதாகட்டும், பருவத்தை தொடுகிற வயதில் சரோஜா தேவி பாலியல் புத்தகங்களை( புனை பெயரில் எழுதியவர் அரசியல் கள எழுத்தாளர் தியாகன் என்பவர்.) படித்து பித்துப்பிடித்து அலைகிற ஜூனியர் பார்த்திபனாகட்டும் , சினிமா உலகில் பைனான்சிய கொடுமைக்கு இரையாகும் அந்த பிராமண தம்பதியாகட்டும் ,கண் முன்பாக மனைவி தீக்குளிப்பதாகட்டும் எல்லாமே வெகு இயல்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. “சிலருடைய பாவங்கள் கங்கைக்குப் போனால் போகும். சிலரது பாவம் கங்கையோடு போனாலும் போகாது” நறுக் வசனம்.”புடவைக்குள் புதைகுழி ..உயிரோடு புதைக்கிறாயே ” என்று முந்தைய தன்னுடைய படத்துக்கு வசனம் எழுதியவர் பார்த்திபன் .இந்த படத்தில் ஓடிடியையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு வசனங்களை வார்த்திருக்கிறார்.பசுமைப் புரட்சி !!
“பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.” என்ற வெட்ட வெளி சித்தரின் பாடலுக்கு ஏஆர் ரகுமானின் இசை செவிகளை நிறைக்கிறது. பின்னணிஇசையோ ரசனையும் காட்சியும் கலந்து கவர்கிறது.
மறக்க இயலாத நடிகைகள் பிரியங்கா ரூத் ,பிரிகிதா ,சினேகா குமார் . இவர்களை தமிழ்ச்சினிமா பயன் படுத்திக்கொள்வது சினிமாவின் வளர்ச்சிக்கு உதவும்.
குறைகளே இல்லையா ? வெட்டலாம் ,ஆனால் ஒருவர் சொதப்பினாலும் தொடக்கத்தில் இருந்து படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆபத்து இருக்கிறது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் பார்த்திபனின் திரையுலக பசிக்கு சிறந்த தீனி.
அவரது அடுத்த முயற்சி என்னவாக இருக்க முடியும் என்கிற கேள்வியுடன் படத்தைப் பாருங்கள்.!
—–தேவி மணி .












