மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிலம்பரசனின் படம்.
கவுதம் வாசுதேவ் மேனன் -சிலம்பரசன் இணைந்து கொடுத்திருக்கிற இந்த படத்தின் கதை ஜெயமோகனின் மூளையில் ஜனித்தது .!
ஆகப்பெரிய அறிவாளிகள் ஒன்று கூடி உருவாக்கிய படம் எப்படி இருக்கிறது?
நெல்லை மாவட்டத்தின் செம்மண் அடர்ந்த நிலத்தில் வளர்ந்த முள்ளுக்காடு தீப்பற்றி எரிந்து நாசமாக,அதிலிருந்து தப்பி பிழைத்த முத்துவின் முழுமையான கதைதான் வெ .த .காடு.!மும்பை போன முத்துவுக்கு. பரோட்டா கடையில் வேலை .நாளடைவில் கேங் லீடருக்கு அடுத்த இடம் .செல்வாக்கு.காதல் ,காட்டிக்கொடுத்தல் ,தலைமை சண்டை என பல மாற்றங்கள் பெறுகிற கதை.புதுமையில்லை .!
நாயகன் கதையைப்போல இருக்கிறது என்று சிலர் உருமா கட்டப்பார்ப்பது மணிரத்னத்தை இழிவுபடுத்துவதாகிவிடும். ஒப்பீடு தேவையில்லை.
உண்மையில் சிலம்பரசனின் உயர்வான நடிப்பு ,உழைப்பு ,அவரது உடல் மொழி இவைகளை பார்க்கிறபோது அற்புதமான நடிகன் இருக்கிறான்,அவனை தகுந்த முறையில் பயன்படுத்திக்கொண்டால் தமிழ்த்திரை உலகம் மேலும் கொண்டாடப்படும் . ஹாலிவுட்டும் வியந்து பேசும் .!
முள்ளுக்காட்டு தீயுடன் மல்லுக்கட்டும் அந்த முத்துவை பார்த்தபோது சத்தியமாக சொல்லுவேன். இவருடைய சமகால நடிகர்கள் எவரும் செய்ய முடியாதது. உடல் மொழி சூப்பர்.!அந்த சத்தற்ற நிலத்துக்குரிய மனித வார்ப்பு. இந்த கதையை ஒற்றை மனிதனாக சுமந்து இருக்கிறார் சிலம்பரசன்.
மும்பையில் நடக்கிற கோஷ்டி சண்டை இயல்பாகவே இருக்கிறது.பிழைக்கப் போனவர்களுக்கு இருக்கிற வெறுமை ,விரக்தியின் வெளிப்பாடுதான் துரோகம் வெட்டுக்குத்து என வளர்கிறது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மணிக்கணக்கில் இழுத்து ரப்பராக்க வேண்டுமா என்ன?
சிலம்பரசன் விரும்பிய அந்த பெண்ணிடம் காதலை சொல்லிவிட்டு முத்தம் கேட்கிற பாங்கு டீனேஜ் மயக்கம்.! அவளுக்கும் ஈர்ப்பு இருக்கிறது என்பது தெரிந்த பிறகு விடாது தொடர்வது இயல்பு. உணர்வின் வெதுவெதுப்பான வெளிப்பாடு. சித்தி இதினானி நாயகியாக சில நிமிடங்களே வந்தாலும் பொறுப்புடன் இயல்பான காதலியாக வாழ்ந்திருக்காங்க.
ராதிகா சரத் குமார் நடிப்பின் அரசி ,சொல்லவே தேவையில்லை கேரக்டரை எந்த அளவுக்கு காப்பாற்றி இருக்கிறார்கள் என்பதை.
சிலம்பரசனைப் போல படத்துக்கு மிகவும் உதவியாக இருப்பது ஏஆர் ரகுமான்தான்.!
எஸ்.டி .ஆர் -ஏஆர் ஆர் .இந்த இரண்டு நல்லவர்களும் இல்லை என்றால் இந்த கதை வதையாக இருந்திருக்கும்.












