படம் தொடங்கியதுமே வேறு உலகத்துக்குள் நுழைந்த உணர்வு. கதையின் இறுதிவரை தொடர்கிறது.
காரணம் கதை, இயக்குநர் மகிழ்திருமேனி, நடிகர் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் .
கார்ப்பரேட்டுகளின் ஒட்டுண்ணித்தன்மையும் ,அதற்கு ஒத்துப்போகிற அரசுகளும் ,யார் எக்கேடு கேட்டால் நமக்கென்ன என்கிற கொள்ளை அடிக்கிற மனமும் கதையின் தன்மையை உயர்த்திப்பிடிக்கின்றன.மக்கள் செத்தால் இயற்கையின் வழி என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட்டுகளின் உண்மைக்கதை.!
இதுவும் நாகரீகத்தின் வளர்ச்சி ,காலத்தின் மாறுபாடு என வாழ்கிற மக்களின் மத்தியில் உதயநிதி தொழில் நுட்ப வல்லுநர் என்பதை அறிமுகக் காட்சியிலேயே உணர்த்திவிட்டு கதைக்குள் புகுந்து விடுகிறார் மகிழ்திருமேனி .பொதுவாக இவரது கதையும் இயக்கமும் பாமரத்தன்மையிலிருந்து விலகியே செல்லும். மேன்மைத் தன்மை.
கடற்கரையோரம் குழந்தைகளுடன் கால்பந்து விளையாடுகிறவர், தனியறையில் தற்காப்புக் கலைப்பயிற்சி ,ரெயில் நிலையத்தில் நிலையத்தில் எதிரிகளை விரட்டுவது என்று விறு விறுவென இருப்பவர் நிதி அகர்வாலையும் உதயநிதி கணக்குப் பண்ணி காதல். சண்டைவரை மனிதர் தன்னுடைய கேரக்டரை குறையின்றி கொண்டு சென்றிருக்கிறார்.
முதல் பாகத்தில் காதல் கதகதப்புக்கு நிதிஅகர்வால், உடல் மொழி சிறப்பு. உடல் கட்டு சுகம். உதயநிதிக்கு உற்சாகப் பானமாக இருக்கிறார். நடித்திருக்கிறார்.பெண்களின் கைப்பையும் உளவியலும் இந்த காதலர்களிடம் பெறும் விளக்கம்,கல்லூரிகளில் பேசப்படும்.
பிக்பாஸ் ஆரவ்.இந்தப்படத்தில் வில்லனுக்கெல்லாம் வில்லன்.பச்சைப்புல்லும் தீப்பற்றிக்கொள்ளும்.. பார்த்தாலே பயம் வருகிறது. ஆரவ் ,ஜெயிச்சிட்டே!
நாயகனின் நண்பராக வரும் கலையரசன், விக்னேஷ், வில்லனின் ஆளாக வரும் அங்கனாராய் உள்ளிட்ட அனைவரும் அவரவர் வேலைகளைச் செய்திருக்கிறார்கள்.
அரோல்கொரோலியின் இசையில் பாடல்கள் காட்சிகளோடு கலந்து ஒலிக்கின்றன. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை பலமா,பலவீனமா?சொல்லமுடியவில்லை.
தில்ராஜுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.
ஸ்ரீகாந்த் என்.பியின் படத்தொகுப்பு நிதானமாக இருக்கிறது.
அடர்த்தியான கதைக்களம், சற்றே மெதுவான நடை.!
எங்கோ ஃபரிதாபாதில் நடக்கும் ஒரு வியாபார ஒப்பந்தம் தமிழகத்தின் கடைக்கோடி மனிதரை எந்த அளவுக்கு நசுக்குகிறது .வஜ்ராவின் வதை இந்திய துணைக்கண்டம் முழுமையும் நாசமாக்கும் என்பதை விவரிக்கும் காட்சியில் தன்னை வெளிச்சப்படுத்திக்கொள்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.
ஒன்றிய ஆட்சியாளர்களின் கோர முகத்தைக் கிழிக்கிறான் கலகத்தலைவன்.