
கோரமாக ,கொடூரக்கொலை செய்கிற சீரியல் கில்லர் யார் ,படுகொலை களுக்கான காரணம் என்ன, எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்பதை இயக்குநர் விக்னேஷ்ராஜா அழுத்தமான காரணங்களுடன் சொல்லியிருக்கிறார். அதிக அளவில் ஆங்கில படங்கள் பார்ப்பார் போல.!மிஷ்கினிடம் முத்தம் வாங்கும் பேறு இருக்கிறது.
அனுபவம் வாய்ந்த சரத்குமார் கொலைகளை விவரிக்கிற காட்சியும் , ,கொலைகாரனை நெருங்கி விட்ட மகிழ்ச்சியில் அசோக் செல்வனுக்கு அட்வைஸ் செய்வதென முற்பாதி ஜிவ்வென பறக்கிறது. கம்பீரம் ,தைரியம்,திறமை என அத்தனை பரிமாணங்களையும் அற்புதமாக கடக்கிறார் சரத்..
சரியான குழந்தை வளர்ப்பு இல்லையென்றால் அதனுடைய எதிர்காலம் சிக்கலில் சிக்கி சீரழியும் என்பதை கதையில் இணைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். திருமண உறவு பிரச்னைகள் ,மற்றும் சமூக ரீதியான காரணங்கள் என நியாயமான நோக்கமுடன் திரைக் கதையை கொண்டு சென்றிருக்கிறார்.
அசோக்செல்வன் சூப்பர் ஜாய்ஸ். தன்னை திறமைசாலியாக காட்டிக்கொள்ள புத்தக அறிவை பயன்படுத்துகிற பாங்கு ,தம்பி நீங்க பாஸாகிட்டிங்க.!
நிகிலா விமலுக்கு அவ்வளவாக பெரிய வாய்ப்பு இல்லை. நாயகி இல்லையே என்கிற குறை தெரியக்கூடாது என்பதற்காக வருகிறார்.
மறைந்த நடிகர் சரத்பாபுவின் கேரக்டர் ,ப்ப்பா மனிதரின் தோற்றம் அச்சுறுத்துகிறது.அனுபவம் வாய்ந்த நடிப்பு, யதார்த்தம்.!
ஹரீஷ்குமார் வில்லன்.நம்ப முடியவில்லை வெகு நேர்த்தி. தேனப்பன் தனது மகளை இழந்து கதறுகிற இடம் எதிர்பாராத அதிர்ச்சி.
. கலைச் செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் ஸ்பெஷல் பாராட்டுக்குரியது.
‘போர்த் தொழில்’ வெயிலுக்கேற்ற நிழலுண்டு.வீசும் தென்றல் காற்றும் உண்டு.
–தேவிமணி