திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் ஜெயராஜூக்கு ரூ. ஒரு லட்சமும் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் சோமாண்டர்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஞானபிரகாசம் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும், ‘குறள் வழி கல்வி’ என திருக்குறளின் மேன்மையை பள்ளி எங்கும், மாணவர்களின் மனதில் விதைக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் திருச்சி சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி பேசியதாவது, ஒரு முழுமையான மனிதனை உருவாக்குவது தான் கல்வியோட நோக்கம்.. நோக்கமா இருக்க முடியும்.. ஆனால் இன்றைய சூழல் மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தர மனநிலை குறையவே இல்லை.. மாணவர்களின் உடல்நலம் மனநலம் பற்றிய போதிய அக்கறை கல்வி சூழலில் இல்லை. வெற்றிகரமா இருக்கணும்.. அதே நேரம் மகிழ்ச்சியாக இருக்கணும்.. நம்ம எல்லாருக்கும் உள்ளேயும் ஒரு திறமை நிச்சயமா இருக்கு அதை வெளிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் வழிகாட்டுவது கல்வியின் நோக்கமாக அமையவேண்டும்.
மதிப்பெண்கள் வாங்குவது மட்டும் கல்வி அல்ல, அன்றாடம் வாழ்விற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பினை எடுத்துக் கூறுவதும் புரிய வைப்பதும் கல்வி முறை தான். பொருளாதாரத்துடனும் சமூகவியலுடனும் நம் நாட்டில் உள்ள சாதி மத அமைப்பு முறைகளை பேதங்களை களையவேண்டிய அவசியத்தை ஏற்றத்தாழ்வுகளை உடைக்க வேண்டிய அவசியத்தை சொல்லித்தருவதும் கல்விதான், என கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வரவேற்புரை ஆற்றினார் கார்த்தி. வரவேற்புரை முடிந்ததும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்












