நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் ‘ஜெயிலர்’. இதில் ரஜினியுடன் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் என பெரிய நட்சத்திர பட்டாளமே திரண்டு நடித்துள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார் .
பான் இந்தியா படமாக உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடல் ‘காவாலா’ வெளியாகி ட்ரெண்ட் ஆன நிலையில் அடுத்து ஹுகும் என்ற இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப் படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. மலையாளத்தில் சக்கிர் மாடத்தில் இயக்கத்தில், தயன் ஸ்ரீநிவாசன் நடிப்பில் ஜெயிலர் என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகியுள்ளது.
ஏற்கனவே இந்தப் படத்துக்காக ஜெயிலர் என்ற தலைப்பை மலையாள திரைப்பட கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ளதால் கேரளாவிலும் இப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் மட்டும் ரஜினியின் ஜெயிலர் வேறு பெயரில் வெளியாகுமா அல்லது மலையாள (ஜெயிலர்) படத் தலைப்பு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்நிலையில், கேரளாவில் மட்டும் வேறு தலைப்பில் ரஜினியின் ஜெயிலர் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.