நடிகை அபர்ணாநாயர் (வயது 31) மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு மகள்கள் திராயா மற்றும் கிருத்திகா உள்ளனர்.
இந்நிலையில்,நேற்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள கரமனாவில் உள்ள அவரது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் ,உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் வரும் வழியிலேயே இறந்துவிட்தாத்தாவும் தகவல்கள் வெளியாகின.இது குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள கரமனை போலீசார்,கிள்ளிபாலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து இரவு 11 மணியளவில் அவரது மரணம் குறித்து தகவல் தங்களுக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது அபர்ணா நாயர் வீட்டுக்கு சென்று கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில்,நடிகை அபர்ணா நாயர் கரமனாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததாகதகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை அபர்ணா நாயர் சந்தனமழை, ஆத்மசகி, மைதிலி விரும்பும் வரும் மற்றும் தேவஸ்பர்ஷம் போன்ற தொலைக்காட்சி தொடர்களின் மூலம் கேரள ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ‘மேகதீர்த்தம்’ (2009), ‘முத்துகவு’ (2016), ‘மைதிலி விரும்பும்’ (2017), ‘அச்சாயன்ஸ்’ (2017), ‘நீரஞ்சனா பூக்கள்’ (2017), ‘தேவஸ்பர்ஷம்’ (2018), ‘பென் மசாலா’ (2018), ‘கோடாதி சமக்ஷம் பாலன் வக்கீல்’ (2019), ‘பிரிட்டிஷ் பங்களா’ (2019), ‘நல்ல விசேஷம்’ (2019), ‘கல்கி’ (2019) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் அபர்ணா நாயர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, “என் உன்னி, விளையாட்டுத்தனமான குட்டி” என்ற தலைப்பில் தனது மகளின் புகைப்படத் தொகுப்பை ஒரு பாடலுடன் வெளியிட்டுள்ளார். அபர்ணா நாயரின் மர்ம மரணம் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













