இந்தியா வெள்ளையரிடம் சிக்கித் தவித்தபோது மலை சார்ந்த சிற்றூரில் நடந்த இனப் படு கொலைதான் கதை.
வெள்ளையன் மட்டுமில்லாமல் சமஸ்தானதிபதிகள் ஆதிக்கத்துக்கும் தமிழர்கள் அடிமையாகிக் கிடந்தனர். சுருக்கமாக சொன்னால் ஆதி குடியை வெள்ளையனும் தமிழனும் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட அவனால் அவனே கட்டிய ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை. இதை எதிர்த்து போராடிய கேரக்டர்தான் ‘கேப்டன் மில்லர்’தனுஷ் .
தமிழீழ விடுதலைப் போராட்டம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது.
சிங்கள ராணுவ முகாமுக்குள் நுழைந்து குண்டுகளை வெடிக்க செய்து தன்னுயிர் ஈந்து 40 சிங்கள ராணுவத்தினரின் உயிர் எடுத்தமாவீரன் விடுதலைப்புலி கேப்டன் மில்லர். தற்கொலை படையின் கரும் புலி.!நிறைவுடன் செய்திருக்கிறார் தனுஷ் .
கடுமையான வேடம். மூன்று விதமான தோற்றங்கள் . நிறைவாக செய்திருக்கிறார் தனுஷ். ஆதிக்கத்தை எதிர்த்துப் பொங்கும் காட்சிகளில் பெரு மழையாக பெய்கிறார். எரிமலையென சீறுகிறார். சா’தீ’ய ஒடுக்குமுறைக்குள் இருந்து விடுதலைப் போராட்டத்தை சொன்னதுக்கு இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு மானமிகு வாழ்த்துகள் .
“முன்னாடி அவனுக்கு அடிமையா இருந்தோம், இப்போ வெள்ளக்காரனுக்கு அடிமையா இருக்கோம். கோயில் கருவறைக்குள்ள போக விடுவானுங்களா?’ என தனுஷ் பேசுகிற வசனம், “கீழ் சாதி, மேல் சாதி, குடிசை மாளிகைன்னு எங்க இருந்தாலும் பெண்கள் அடிமை தான். நம்ம சொல்றத கேக்கணும்னா நமக்கு அதிகாரம் இருக்கணும்” என்று அதிதி பாலன் பேசும் வசனம் இன்றைக்கும் பொருந்திப் போகின்றன.
“கோயில் கருவறைக்குள்ள நம்ம போகலாமா?” என ஒடுக்கப்பட்டவர்களின் தலைவன் கேட்க , “போக கூடாதுன்னு எந்த சாமியும் சொல்லலயே”,என்று தனுஷ் பதில் சொல்ல , தியேட்டரில் கரவொலி. இது நமது அனுபவத்தின் முந்தைய வலி .!அந்த பதிலில் கேரக்டரின் ஆற்றாமையும் இருக்கிறது
பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், அதிதி பாலன் ஆகிய மூன்று நடிகைகள் இருக்கிறார்கள்.தனுஷுக்கு ஜோடியாகவா ?
இல்லை. கதை சொல்லும் கருத்துக்கு தலைவிகளாக இருக்கிறார்கள்.
கன்னடசூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் . செங்கண்ணன் . புரட்சிப் படையின் தலைவர். தனுஷுக்கு அண்ணன். அவ்வளவே.!சமஸ்தானமாக அதாவது ஜமீன்தாரராக வருகிற ஜெயப்பிரகாஷ் வந்து போவதைப்போல சிவராஜ்குமாரும் ஆடிவிட்டு ,பேசிவிட்டுப் போகிறார்.
இளங்கோ குமரவேல், காளி வெங்கட், வினோத் கிஷன், அப்துல் லீ, ஜான் கொக்கன், ஆகியோர் சிறப்பு. என்றாலும் எனக்கு மாபெரும் குறையாக தெரிந்தது காளி வெங்கட்டின் துரோகத்தை அம்பலப்படுத்தி தண்டிக்காததுதான் !
ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்களும் பின்னணியும் ஆனந்தமே.!
சித்தார்த்தா ஒளிப்பதிவு கதையில் ஊடுருவி நெருப்பென காட்சிகளிலும் அனலடிக்கிறது .
மண், பெண்விடுதலையுடன் சாதீய விடுதலையையும் இணைத்து தானியங்கி துப்பாக்கிகளின் தோட்டாக்களாக பாய்ந்திருக்கிறார் இயக்குநர் அருண்மாதேஸ்வரன்.
ஒன்றிய அரசின் அசோக சக்கரம் உள்ள மூவண்ணக் கொடி போராளிகளின் கையில் இருந்தது எனக்குப் புரியாத புதிர், இன்னும் சில என்றாலும் கதை ஓட்டத்தில் உறுத்தவில்லை .
சிறந்த படம் . பார்க்கலாம்.!தனுஷுக்கு வெற்றி
–தேவிமணி