
ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மல்லையன் பேசியதாவது….
எங்கள் பட விழாவிற்கு வருகை தந்திருக்கும் திரை ஆளுமைகள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். EMI எடுத்து எத்தனையோ பேர் மனநிம்மதி இல்லாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். பலர் EMI ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் கதையை இந்த EMI படம் சொல்கிறது. EMI எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்தப்படம் பேசியுள்ளது, அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
இந்த விழாவை என் குடும்ப விழா எனச் சொல்லலாம். என் அஸிஸ்டெண்டின் அஸிஸ்டென்ட் இப்படத்தை இயக்கியுள்ளார். என் கொள்ளுப்பேரன் எனச் சொல்லலாம். EMI அகலக்கால் வைக்காமல் நம் தகுதிக்கு எடுத்தால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தான் சிக்கிக் கொள்வோம். இந்த படக்குழு EMI ல் தப்பித்துவிட்டார்கள். முதல் EMI சரியாகக் கட்டிவிட்டார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இங்கு இயக்குநர் பாக்யராஜ் வந்துள்ளார். அவர் தன் முதல் படத்தில் ஒரு சிறு தெருவை மையமாக வைத்து, மிக அழகான படத்தைத் தந்தவர். இப்போது யாராலும் அது முடியாது. இப்போது சரியானவர்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை, நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுப்பதையே நிறுத்தி விட்டார்கள். அந்தக்காலத்தில் படம் பூஜையின் போதே படம் விற்று விடும். ஆனால் இப்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. அப்போது 16 படம் வெளியாகி 16 படமும் ஜெயிக்கும், பல வித்தியாசமான களங்களில் படம் வரும், இப்போது அந்த மாதிரி ஹெல்தி சினிமா இல்லை. இப்போது இருக்கும் இயக்குநர்களை போனில் பிடிக்க முடியவில்லை. எங்கே போகிறது தமிழ் சினிமா? இந்த நிலைமையை மாற்ற இம்மாதிரி EMI படத்தை ஆதரிக்க வேண்டும். இப்போது சின்ன படங்கள் தான் ஓடுகிறது. ரப்பர் பந்து, குடும்பஸ்தன் படங்கள் வரும் வரை அதைப்பற்றி யாருக்கும் தெரியாது, ஆனால் அந்தப்படங்கள் மிகப்பெரிய வெற்றி. அது போல இந்தப்படமும் வெற்றி பெறட்டும். படம் பார்க்க மிக நன்றாக உள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
நடிகை சாய் தன்யா பேசியதாவது…
EMI படம் மிக அழகான படம், கிருஷ்ணகிரியில் தான் ஷீட் செய்தோம். EMI யோட கொடுமைகளை இந்தப்படத்தில் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளோம். உங்களுக்கு விழிப்புணர்வு தரும் படமாக இப்படம் இருக்கும். EMI ஆல் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் நண்பர்களை, இந்தப்படத்திற்கு அழைத்துச் சென்று காட்டுங்கள். நன்றி.
நடிகை தேவயானி பேசியதாவது..
இயக்குநர் சங்கத்திலிருந்து இந்த படத்தின் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்கள். EMI டைட்டிலே எனக்குப் பிடித்திருந்தது. EMI வாங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எல்லோரும் EMI வாங்குகிறோம் அதைச் சரியாகப் பயன்படுத்தினால் நல்லதாக இருக்கும், இல்லையெனில் அது பிரச்சனையாகி விடும். அதை இந்தப்படத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். இயக்குநரே நடித்துள்ளார் வாழ்த்துக்கள். இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள் படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி. வாழ்க்கையில் எப்போதும் புதிதாக எதையாவது செய்ய வேண்டும், புதிதாக முயற்சி செய்ய வேண்டும், அந்த வகையில் தான் இயக்கம் படித்து குறும்படம் எடுத்தேன். அதன் திரையிடல் இங்கு தான் நடந்தது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது..
என் அழைப்பை ஏற்று வந்த ஆளுமைகளுக்கு என் நன்றி. என் உதவி இயக்குநர் இயக்கியுள்ள படம் இது. சினிமாவில் முதன் முதலில் என்னை கதை எழுத வைத்தவர் பாக்யராஜ் சார் தான். கதை திரைக்கதை வசனம் இயக்கம் என போட வைத்தது அவர் தான். இயக்குநர் என்றால் அவர் தான் கதை எழுத வேண்டும், என விதியை உருவாக்கியவர் அவர் தான். அவர் ஒரு ஜாம்பவான். அவர் வாழ்த்த வந்திருப்பதற்கு நன்றி. EMI எல்லோரும் வாங்கியிருப்பார்கள், முதல் மூணு மாதம் கட்டுவார்கள் ஆனால் 4 வது மாதம் கட்ட மாட்டார்கள், வாங்கியவர் ஆஃபிஸ் போய்விடுவார்கள், வசூலிக்க வருபவர்களிடம் பெண்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆம்பளைகள் வாங்கும் EMI ஆல் பாதிக்கப்படுவது பெண்கள் தான். EMI எல்லோரும் பொறுப்போடு பார்க்க வேண்டிய அருமையான படம், EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது அதைத்தான் இந்தப்படம் பேசுகிறது. இன்று டாஸ்மாக் ஒரு போதை, EMI இன்னொரு போதை, இது ரெண்டும் அழிய வேண்டும் நன்றி.

இயக்குநர் சதாசிவம் சின்னராஜ் பேசியதாவது..
EMI படம் என் வாழ்வில் நான் நேரிடையாக பார்த்தது. ஒரு நண்பருக்குத் தொடர்ந்து கால் வந்து கொண்டே இருந்தது ஆனால் அவர் அட்டன் செய்யவே இல்லை, கார் எடுத்துவிட்டு EMI டார்ச்சரை அனுபவித்தார். அதை நேரில் கண்டபோது தான் இது அனைவர் வாழ்விலும் நடக்கும், அதை எடுக்கலாம் என முடிவு செய்தேன். முதல் முதலில் கதையைப் பேரரசு சாரிடம் சொன்னேன், இப்போது வரை படத்திற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். முதலில் 4 பேர் சேர்ந்து தான் தயாரிப்பதாகத்தான் இருந்தது, ஆனால் தயாரிப்பாளர் மல்லையன், நீ ஏன் எல்லோருக்கும் பதில் செய்கிறாய், நானே தயாரிக்கிறேன் என்று, என்னை நம்பி இறங்கினார். அவருக்கு என் நன்றி. இந்தப்படத்தில் சமூகத்திற்கான கருத்தை பேசியுள்ளோம். எல்லோர் வாழ்விலும் இதை அனுபவித்திருப்பார்கள் அதைத்தான் படமாக எடுத்துள்ளோம். நான் முதலில் நடிப்பதாக இல்லை, எந்த ஹீரோவும் சின்ன பட்ஜெட்டுக்கு ஒத்துக்கொள்ள வில்லை அதனால் தான் நானே நடித்து விடலாம் என இறங்கி விட்டேன். நல்ல படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது….
EMI டைட்டிலே எளிதாக புரிகிறது. சில நேரம் பட டைட்டிலே புரியாது, இந்த டைட்டிலிலேயே எல்லாம் புரிந்து விடுகிறது. தயாரிப்பாளர் மல்லையன், இயக்குநரையே நடிகராகத் தைரியமாக ஆக்கியுள்ளார் அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இசையமைப்பாளர் மிக அருமையாகப் பாடலை தந்துள்ளார், தொழில் நுட்ப கலைஞர்கள் மிக நன்றாக வேலை பார்த்துள்ளனர். விஷுவல் பார்க்க நன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்துள்ள இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். நானே முதல் படத்திற்கு ஒரு மொக்கை கதையைத் தான் வைத்திருந்தேன் ஆனால் உதவி இயக்குநராக வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு, அதைத் தூக்கிப் போட்டுவிட்டேன். நம் வாழ்க்கையிலிருந்து கதையை எடுப்போம் என கதை செய்தேன். நம் வாழ்க்கையை எடுத்தால் படம் ஜெயிக்கும். EMI எல்லோரும் அனுபவிப்பது தான். இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காமெடி சென்ஸோடு படத்தைச் சொல்லியிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள், படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.

கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், OAK சுந்தர் லொள்ளுசபா மனோகர், TKS, செந்தி குமாரி, ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார்
சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் இந்த படத்தின் பாடல்களை பேரரசு மற்றும் விவேக் இருவரும் எழுதியுள்ளனர்.