
‘Dawn Pictures’ நிறுவனத்தின் சார்பில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள திரைப்படம், பராசக்தி. சுதா கொங்காரா, எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சிவ கார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா, சேத்தன், குலப்புள்ளி லீலா, பிருத்விராஜன், காளிவெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை, ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவு, ரவி.கே.சந்திரன்.
தமிழ்நாட்டில் , இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் 1930களில் இருந்தே நடந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக 1937ல் முதல் போராட்டம் வெடித்து நீள்கிறது.. அதன் பிறகு நாட்டையே உலுக்கிய, 1965-இல் நடந்த மிகப்பெரிய போராட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. மதுரையிலும் நடந்தது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கொடூரமாக பலர் கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்தை மையமாகக் கொண்டு, தனது கற்பனையைக் கலந்து ‘பராசக்தி’ திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் சுதா கொங்காரா.
எப்படி இருக்கிறது?
பாட்டி, குலப்புள்ளி லீலாவின் அரவணைப்பில் இருந்து வரும், சிவ கார்த்திகேயன் மற்றும் அதர்வா இருவரும் தாய், தந்தையை இழந்தவர்கள். சிவகார்த்திகேயன், இந்தித் திணிப்புக்கு எதிராக செயல்படும் ‘புறநானூறு’ என்ற அமைப்பின் தலைவராக ரகசியமாக இயங்கி வருகிறார். ஒரு போராட்டத்தின் போது தனது உற்ற நண்பனை இழந்து விடுகிறார். அதனால் போராட்டத்திலிருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில், பணிக்காலத்தில், உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு மூலமாக, லோகோ பைலட்டின் உதவியாளராக பணிபுரிகிறார், சிவ கார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வாவும், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை சிவகார்த்திகேயன் கண்டிக்கிறார். வேலை வாய்ப்புகளும், அடிப்படை உரிமைகளும் பறிபோன சூழ்நிலையில், போராட்டம் எளிய மக்களிடமும் எழுச்சியை உருவாக்குகிறது.
சிவகார்த்திகேயனும் போராட்டத்தில் குதிக்கிறார். தமிழ் நாடெங்கும் மாணவர்களின் தன்னெழுச்சிப்போராட்டம் விஸ்வரூபம் எடுக்கிறது. அதை ஒடுக்குவதற்காக மத்திய அரசின் நேரடிப்பார்வையில், பாதுகாப்பு உயரதிகாரியாக மோகன் ரவி நியமிக்கப்படுகிறார். அதன்பிறகு என்ன நடந்தது? என்பதை, பதை பதைக்கும் காட்சிகளோடு, உணர்வுப்பூர்வமாக சொல்கிறார்கள் ‘பராசக்தியில் ’.
சிவகார்த்திகேயன், செழியன் என்ற கதாபாத்திரத்தில், குடும்பத்தை வழிநடத்திச்செல்லும் இளைஞனாகவும், மொழித் திணிப்பின் மூலம் பறிபோகும் வேலை வாய்ப்பை மீட்டெடுக்க எழுச்சிக்கொள்ளும் இளைஞனாகவும், மாறுபட்ட நடிப்பினை வெகுச்சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா உடனான காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ரவி மோகனுடன் மோதிக்கொள்ளும் காட்சிகளில் அனல் தெறிக்க விட்டிருக்கிறார். படத்தின் பெரும் பலமாகவே இருக்கிறது, சிவகார்த்திகேயனின் நடிப்பு.
ரவிமோகன், போராட்டத்தை அடக்கும் கொடூரமிக்க அதிகாரியாக நடித்திருக்கிறார். பெரும் வசனங்களின்றி, தனது பார்வைகளின் மூலமாகவே அனைவரையும் கிடுகிடுக்க வைத்து விடுகிறார். போராட்டக்க்களத்தில் மாணவர்கள் மீது அவர்காட்டும் வில்லத்தனம், படம் பார்வையாளர்களிடத்தில் கோபத்தை உருவாக்கி விடும் அளவிற்கு, தனது நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் தம்பியாகவும், இந்தித் திணிப்பை எதிர்த்து போராடும் மாணவராகவும் நடித்திருக்கிறார், அதர்வா. கவனம் பெற்றுவிடும் நடிப்பை கொடுத்துள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து தனித்து நிற்கிறது, அவரது நடிப்பு.அந்தக் கால கார்த்திக் நினைவு வருகிறது,இந்த மூவருமே பராசக்தியை சிகரம் கொண்டு சென்றிருக்கிறார்கள்.வாழ்த்துகள்.

இந்தி திணிப்புக்கு எதிரான மற்ற மாநிலத்தவர்களாக ராணா டக்குபதி, ஃபாசில் ஜோசஃப், தனஜெயா ஆகியோரது நடிப்பும் கவனம் பெறுகிறது.
அறிஞர் அண்ணாவாக சேத்தன். கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார்.
குரு சோமசுந்தரம், குலப்புள்ளி லீலா, பிருத்விராஜன், காளிவெங்கட் ஆகியோரும் கவனம் பெறுகிறார்கள்.
அதர்வாவுடன் இணைந்து போராடுபவராக நடித்திருக்கும் ஸ்ரீலீலா, திரைக்கதையோடு பயணிக்கும் வலுவான, சிறப்பான கதாபாத்திரத்தில் தனிக்கவனம் பெறுகிறார். சிவகார்த்திகேயனுக்கு இந்தி சொல்லிக்கொடுப்பவராகவும், அவரது காதலராகவும் ரசிகர்களின் மனம் நிறைகிறார்.
ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது.இது இவருக்கு நூறாவது படம்.
எழுதி இயக்கியிருக்கும் சுதா கொங்காரா, மாணவர்களின் இந்தித்திணிப்பிற்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டத்தை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.












