
சமுத்திரக்கனி , ஷிவதா , ராஜ் திரன் தாஸ், பிரேம், ‘மூணாறு’ ரமேஷ், சுந்தர் பாண்டியன், கொற்றவை , அழகன் தமிழ்மணி, விஷாகன், புலிப்பாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுபர்னா, தயாளன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், நவின்குமார் பழனிவேல். ஒளிப்பதிவு, கே கே. இசை, விபின் பாஸ்கர்.
ஆந்திரா – தமிழ்நாடு எல்லைப்பகுதியில் உள்ள ஒரு கிரமத்தில் கணவன், மனைவி இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். கொலை செய்யப்பட்டவர்களின் உடமைகள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. ஆனால் தாலியும், ஆண் அணிந்திருந்த அரைஞாண் கயிறும் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த இரட்டை கொலையை போலீஸ் விசாரணை செய்து வரும் சூழலில், மீண்டும் ஒரு இரட்டை கொலை நடக்கிறது. இதனால், விசாரணையை தீவிரப்படுத்தி கொலையாளியை கைது செய்ய, இன்ஸ்பெக்டர் ஷிவதா அதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறார். அவருக்கு துணையாக சமுத்திரக்கனி. குற்றவாளியை நெருங்கும் போது, அவர்கள் 70க்கும் மேற்பட்ட கொலைகளை ஆந்திராவில் செய்திருப்பது தெரிய வருகிறது. கொலையாளி யார், எதற்காக கொலை செய்கிறார்கள்? என்பதை, பதைபதைப்புடன் சொல்லப் பட்டிருப்பது தான், தடயம்.
எழுதி, இயக்கியிருக்கும் நவீன்குமார் பழனிவேல், உண்மை சம்பவத்தை கற்பனை கலந்து கொடுத்திருக்கிறார். முதல் தொடர், இரட்டை கொலைகள், அதை தொடர்பான விசாரணை என, அடுத்தடுத்த தொடர்கள் வேகமாக செல்கிறது. கிரைம் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. பழி வாங்கல் காரணத்திற்காக சில கொலைகள் நடத்தபட்ட பிறகு, சைக்கோவாக மாறிப்போய் அடுத்தடுத்த கொலைகள் நடப்பது பகீர் கிளப்புகிறது.
கொலைகாரர்களில் ஒருவராக ராஜ் திரன் தாஸ், அவரது தோற்றமே பயத்தை கிளப்புகிறது. கதாபாத்திரத்திற்கான சரியான தேர்வு. திறன்பட நடித்துள்ளார். போலீஸ் வேலை பிடிக்காத போலீஸ்காரராக சமுத்திரக்கனி, இயல்பாக நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக ஷிவதா. அந்த கதாபாத்திரத்தில் சரியாக பொருந்திக்கொள்கிறார்.
காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் மூணாறு ரமேஷ், சுந்தர் பாண்டியன், கொற்றவை, அழகன் தமிழ்மணி, விஷாகன், புலிப்பாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுபர்னா, தயாளன் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
கே.கே-வின் ஒளிப்பதிவும், விபின் பாஸ்கரின் இசையும் திரைக்கதை நகர்வுக்கு பலம் சேர்க்கிறது. பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்றாலும், நம்ப முடியாத காட்சிகள் இருப்பது சுவாரசியத்தை குறைக்கிறது.
‘தடயம்’ – க்ரைம் பிரியர்களுக்கு!












