‘ஆன் த டேபிள் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் பாலு. எம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘போலீஸ் ஃபேமிலி’. இதில் சித்தப்பு சரவணன், காதல் சுகுமார் , ராஜா மலைச்சாமி, நிஷா துபே, சுரேகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அரசியல் செல்வாக்கு மிக்க, வட சென்னையின் பிரபல சரித்திர குற்ற பதிவேடு குற்றவாளி, சித்தப்பு சரவணன் திருந்தி வாழ நினைக்கிறார். இதன் காரணமாக தனது ஒரே மகனுடன் மதுரையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். விளையாட்டில் ஆர்வம் காட்டி வரும் அவரது மகனுக்கு உறுதுனையாக இருந்து வருகிறார்.
இரவுநேரம் ரோந்துப் பணியில் இருக்கும் போலீஸ் ஏட்டு காதல் சுகுமார், சித்தப்பு சரவணின் மகனை சந்தேகத்தின் பேரில் விசாரிக்கும்போது, அவரது பையில் கஞ்சா இருப்பது தெரிய வருகிறது. அதனை மேற்கொண்டு, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது அங்கே நடக்கும் ஒரு சம்பவத்தால், அன்று பணியிலிருந்த அனைவரின் குடும்பமும் இக்கட்டான சூழலில் சிக்குகிறது. எதற்கு, எப்படி? தான், போலீஸ் ஃபேமிலி படத்தின் மீதிக்கதை.
வழக்கமான, ரௌடிகளுக்கும் காவல் துறைக்கும் நடக்கும் போராட்டம் தான் கதைக்களம். பழிவாங்கும் குணம் கொண்ட ஒரு காவலராலும், அதிகார துஷ் பிரயோகம் செய்யும் காவலராலும் அவர்களின் குடும்பத்தினர் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். என்பதை கொஞ்சம் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்பட்டது போல் இல்லை. மேலும் காவல் துறை எப்போதும் காவலர்களுக்கு சாதகமாகவே செயல்படும். கோர்ட் சம்பந்தப்பட்டால் மட்டுமே அவர்களை கைவிடும். போலீஸ் இலாகாவை மிரட்டும் அளவிற்கு எந்த ரௌடியையும் போலீஸ் பார்த்து கொண்டிருப்பது இல்லை. சிம்பிளா ஷூட் அவுட் (என்கவுன்டர்) பண்ணிவிட்டு போய்க்கொண்டே இருக்கும். இது திரைக்கதையில் போதிய நம்கத்தன்மையை கொடுக்கவில்லை. இருந்தாலும் போலீஸூக்கு அறிவுரை சொல்லும் விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
தாதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தப்பு சரவணனின் அனுபவ மிக்க நடிப்பால் அந்த கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாலும், அவர் தனது நடிப்பு திறமையைக் காட்ட காட்சிகள் எதுவும் இல்லை. காதல் சுகுமார் போலீஸ் ஏட்டாக நடித்து, திரைக்கதையில் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். இவர்களை போல் ராஜா மலைச்சாமி, நிஷா துபே, சுரேகா, ரோஜன் லியோ, ரத்தினம் போன்றோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் ஒகேவாக இருக்கிறது. குறிப்பாக தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, பட்ஜெட் படம் என்பதை நினைவூட்டுகிறது. எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் பாலு. எம் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.












