பரத் , அஜய் கார்த்தி , சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணதி , அனந்த் நாக் ,பி ரகாஷ் ராஜ் , கிஷோர் ஆகியோர் நடித்து, ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், காளி தாஸ் 2. இத்திரைப்படத்தை, ‘ஸ்கை பிக்சர்ஸ்’ சார்பாக ‘“ஃபைவ் ஸ்டார்’ கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். இசை, சாம் சி.எஸ். ஒளிப்பதிவு, சுரேஷ் பாலா.
சென்னை நகரின் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட வளாகத்தில் புத்தாண்டை முன்னிட்டு, அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கிறார்கள். இந்த கொண்டாட்டங்களின் நடுவே ‘மித்ரா’ என்ற பெண் குழந்தை காணாமல் போகிறது. கொண்டாட்ட மன நிலையிலிருந்த அனைவரும் இறுக்கமான மன நிலைக்கு செல்கின்றனர். அந்த வளாகத்தின் செகரெட்டரி போலீஸூக்கு தகவல் கொடுக்கிறார். இதன் காரணமாக, (பரத்) இன்ஸ்பெக்டர் ‘காளிதாஸ்’ விசாரணையில் இறங்குகிறார். வளாகத்தின் மூலை, முடுக்குகளில் எல்லாம் தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. நிலைமை விபரீதமாக இருப்பதால், (பவானி ஸ்ரீ) அஸிஸ்டென்ட் கமிஷனர் வைஷ்ணவி விசாரணையை மேலும் தீவிரப்படுத்துகிறார். இருந்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்குள் அதே குடியிருப்பில் இருக்கும் இன்னொரு சிறுமி நீச்சல் குளத்தில் பிணமாக மிதக்கிறார். நீண்ட விசாரணைக்குப் பிறகு (அஜய் கார்த்தி) ஸ்டீபன் என்ற வாலிபர் மீது சந்தேகம் கொள்ளும் போலீசார் அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகின்றனர். இதன் பிறகு கதையின் போக்கு முற்றிலும் மாறி, பல திருப்பங்களுடன் யூகிக்க முடியாத ‘க்ளைமாக்ஸை’ எட்டிப்பிடிக்கிறது, காளிதாஸ் 2.
பரத், காவல்துறை ஆய்வாளராக காளிதாஸ் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். நிதானமான போக்கில், அவர் மேற்கொள்ளும் விசாரணையின் தோரணையும் சிறப்பாக இருக்கிறது. மேலதிகாரிகளின் அழுத்தங்கள், எப்படியாவது குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்ற தவிப்பு ஆகியன திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது.

‘ஐபிஎஸ்’ மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட, உதவி ஆணையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவானி ஸ்ரீ, புதிதாக போலீஸ் வேலைக்கு வருபவர்களை கண்முன் நிறுத்துகிறார். அவர், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
போலீஸ் சந்தேகத்திற்கு ஆளாகும் அஜய் கார்த்தி, அறிமுக நடிகரைப்போல் அல்லாமல் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்துகிறார். சிலுவை முன் நிற்கும் ஒரு காட்சியில் பயமுறுத்துகிறார்.
ஆனந்தநாக், அபர்ணதி தம்பதி குழந்தையை பறிகொடுத்த தம்பதியினராக, அவர்களது பரிதவிப்பினை பார்வையாளர்களுக்கு கடத்துகின்றனர். அபார்ட்மென்டின் செகரெட்டரியாக சங்கீதா. நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்பு. அதை திறமையாக வெளிப்படுத்துகிறார். மற்றபடி பி ரகாஷ் ராஜ் , கிஷோர் ஆகியோரும் தங்களது திறமையான நடிப்பின் மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும், சாம்.சி.எஸ்’ன் இசையும் படத்தின் பலமாக இருக்கிறது. அடுத்தடுத்து காணாமல் போகும் குழந்தைகள். அதை ஒட்டிய விசாரணை, பதற்றம். என பல திருப்பங்கள் நிறைந்த, ஒரு நல்ல கிரைம் த்ரில்லராக செல்லும் திரைக்கதையை, நம்பகமில்லாத க்ளைமாக்ஸூடன் முடித்திருக்கிறார், இயக்குநர் ஸ்ரீ செந்தில்.












