ஆர்யா, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், ரைசா வில்சன், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை எழுதி இயக்கியிருக்கிறார், மனு ஆனந்த். திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்க, ஒளிப்பதிவு செய்துள்ளார், அருள் வின்செண்ட். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ளார்.
‘இந்திய’ ரா உளவு அமைப்பில், அதன் ஏஜெண்டுகளுக்கிடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான், ‘மிஸ்டர் எக்ஸ்’.
இமயமலைப் பகுதியில் சோதனைக்காக, அணுக்கருவின் மூலம் வெடிக்கச்செய்யும் ஒரு நியுக்கிளியர் டிவைஸை, சோதனை செய்வதற்காக எடுத்துச்செல்கிறார்கள். அந்த சமயத்தில் ஏற்பட்ட பனிச்சரிவினால் அது தொலைந்து போகிறது. அதை ரஷ்யா கைப்பற்றிவிடுகிறது. அதை மீட்க ‘ரா’ ஏஜெண்ட் சரத்குமார் செல்கிறார். அது முடியாமல் போக, ரஷ்யாவிலிருந்து அந்த நியுக்கிளியர் டிவைஸையும் சரத்குமாரையும், பாகிஸ்தானுக்கு கடத்திச்செல்ல்ல முயற்சி நடக்கிறது. இதை தடுத்தி நிறுத்தி இந்தியாவுக்கு கொண்டுவர, ‘ரா’ ஏஜெண்ட் ஆர்யா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்படுகிறது. அந்தக்குழு என்ன செய்தது? எனபது தான், மிஸ்டர் எக்ஸ்!
மூத்த ‘ரா’ ஏஜெண்டாக சரத்குமார். மற்றும் ஆர்யா, கௌதம் கார்த்திக். அந்த அமைப்பின் அதிகாரியாக மஞ்சு வாரியர். இவர்களை சுற்றி பின்னிப் பிணைந்திருக்கும் திரைக்கதை யூகிக்க முடியாத படி செல்கிறது. அது கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்காகவும் செல்கிறது. அவ்வப்போது கொஞ்சம் போரடிக்கவும் செய்கிறது. இதெல்லாம் சாத்தியமா? என பல கேள்விகள் படம் பார்க்கும் போது எழுகிறது. அவைகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் பிடிக்கலாம்.

நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, வலிமையான உடல் தோற்றத்துடன் சண்டைகாட்சிகளில் சாகசம் செய்கிறார். அவருக்கும் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனகாவுக்கும் இடையே உள்ள காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. அனகா அழகாக இருப்பதுடன், ரசிக்கும்படி நடித்திருக்கிறார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் கெளதம் கார்த்திக், வசனங்கள் அதிகமின்றி, அலட்டாமல் ஸ்டைலிஷான, சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் ஈர்த்துவிடுகிறார். ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார், மூத்த ‘ரா’ ஏஜெண்டாக நடித்து, கதையை நகர்த்துபவராக இருக்கிறார். அவருடைய கெட்டப் கொஞ்சம் நெருடல். அதுல்யா ரவி, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், ரைசா வில்சன், சஞ்சனா சிங் ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் , காட்சிகளுக்கு பிரமாண்டம் சேர்த்திருக்கிறார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, சண்டைகாட்சிகளை இன்னும் தரமானதாக உருவாக்கியிருக்கலாம். இந்திய உளவு அமைப்பு பின்னணியில் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் மனு ஆனந்த், இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி எடுத்திருக்கலாம்.
மொத்தத்தில், எதிர்பார்ப்பின்றி வருபவர்களை ஏமாற்றாது!












