நாயகன் C.நிகில், நாயகி ஹர்ஷா ஆகியோருடன் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், youtube புகழ் காத்து கருப்பு கலை, இன்ஸ்டா புகழ் கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா (Villain), பிரபாகர், கேரளா பெஹமின், மும்பை மாடல் அழகி நிதி மரோலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சி.பாரதி ராஜன் Dft ஒளிப்பதிவு செய்திருக்க, வேலன் சகாதேவன் இசையமைத்திருக்கிறார். தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ஜெகன் ராயன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். ‘ரூம் பாய்’ திரைப்படத்தினை ‘ஏசிஎம் சினிமா’ சார்பில், சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கிறார்.
தாய், தந்தையை இழந்த நாயகன் C.நிகில், சிறார் கூர்நோக்கு இல்லத்தின் (Juvenile Care Home) வார்டனால் பரமரிக்கப்பட்டு வருகிறார். சில வருடங்களுக்குப்பிறகு கூர்நோக்கு இல்லத்திலிருந்து வெளிவரும் அவர், ஏலகிரியில் உள்ள ஒரு ஓட்டலில் ரூம் பாயாக வேலை செய்கிறார். அந்த ஓட்டலின் மேனேஜர் அங்கு வேலை செய்பவர்களிடத்தில், சட்டத்திற்கு புறம்பாக கடுமையாக நடந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், சிறார் கூர்நோக்கு இல்லத்தின் வார்டன் மாயமாகிறார். அது, நாயகன் C.நிகில் மீது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்நிலையில், ஓட்டலின் மேனேஜர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இந்தக்கொலையும், நாயகன் மீது விழுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை சொல்லும் க்ரைம் த்ரில்லர் தான், ரூம் பாய்.
அறிமுக நாயகனான சஞ்சய், ஒரு சில இடங்களில் மட்டும் நடிக்கத் திணறினாலும், ஓரளவு நடிக்கவும் செய்திருப்பது ஆறுதலான விஷயம். நாயகி ஹர்ஷாவுக்கு நடிப்பதற்கு பெரிதான காட்சிகள் இல்லை. பெயரளவுக்கு மட்டுமே வந்து போவதோடு, நாயகனோடு டூயட் பாடுகிறார். காமெடிக் காட்சிகளுக்காக இமான் அண்ணாச்சி, அவரிடம் காமெடி படாத பாடு படுகிறது. படம் பார்ப்பவர்களையும் பாடாய் படுத்துகிறது. நாயகனின் நண்பனாக காத்து கருப்பு கலை, குறை சொல்லமுடியாத நடிப்பினை வெளிப்படுத்துகிறார். மற்றபடி இன்ஸ்டா புகழ் கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
ஏலகிரியின் சுற்றுப்புறங்களையும், ஓட்டலின் அறைக்குள் நடக்கும் சம்பவங்களையும் குறை சொல்ல முடியாதபடி படம்பிடித்துள்ளார், ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜன். வேலன் சகாதேவனின் இசையில், பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே தான். பிளாக் மெயில், கள்ளக்காதல், ஓட்டலில் நடக்கும் அத்துமீறல்கள் என கதை செல்கிறது. அதை, பரபரப்பான காட்சிகள் மூலம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது மிஸ்ஸிங்!
மொத்தத்தில், சின்ன பட்ஜெட் கமர்சியல் மசாலா!












