இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்.சிம்பு -நயன் கதையா?

 

சினிமாமுரசம் ரேட்டிங்;3/5 

கதை, இயக்குநர்; ரஞ்சித் ஜெயக்கொடி. இசை; சாம் சி.எஸ். வசனம் ; ராஜன் ராதாமணாளன்,ரஞ்சித் ஜெயக்கொடி,ஒளிப்பதிவாளர்; கவின்ராஜ்.

நடிகர்கள்; ஹரிஷ் கல்யாண்,ஷில்பா மஞ்சுநாத், பொன்வண்ணன் மா.கா.பா.ஆனந்த்,பால சரவணன்  

கவுதம் கேரக்டரில் சிம்புவும்,தாரா கேரக்டரில் நயனும் நடித்திருந்தால் படத்தின் ரேஞ்சே வேற.! கதாசிரியர் அவர்கள் இருவரையும் மனதில் வைத்துக் கொண்டுதான் காட்சிகளை  அமைத்திருக்க வேண்டும் என  நமது ஏழாவது அறிவு சொல்கிறது.

ஹரிஷ் கல்யாணின் (கவுதம்) அந்த கோபம், ஆத்திரத்தில் பாத்திர ,பண்டங்களை கடாசுவது, சினம் தணிந்து காதலியிடம் கெஞ்சுவது கொஞ்சுவது, இப்படி எல்லாமே சிம்புவுக்கு சூப்பராக பொருந்தலாம்.அசலாகவே இருக்கும். நகலெடுத்தது போல இருந்திருக்காது. 

காதலன் முரடனாக இருந்தாலும் அவனின் அந்த காதலில் போலித்தனம் இல்லை,அவனது ஏக்கமும் அவளின் இணக்கமும் நந்தவனமாக இருக்கிறது. அங்கே தேனீக்களுக்கு பதிலாக தேள்கள் குடி கொண்டுவிடக்கூடாது  என்கிற கவலை நமக்கே வந்து விடுகிறது. காதலனுக்காக பச்சைகள் குத்திக் கொள்வது, அவன் முரண்டு பிடித்துக் கொண்டு முகம் திரும்பினாலும் போன்வழிச்செய்திகளில் மனம் திறப்பதும் நயன்தாராவாக இருந்தால் …பிச்சிக்கும்.!இருந்தாலும் ஷில்பாவின் அந்த கட்டைக்குரலிலும் கவர்ச்சி ,காமம் இருக்கிறது. சற்றே முதிர்ச்சியான முகம்.

கதையில் காதல் ,காமம், கோபம்,குரோதம் எல்லாமே இருக்கிறது. அம்மா ஓடிப்போனவள் என்கிற காயம் ஹரிஷ் கல்யாணுக்கு.அதனால் வலி நிவாரணியாக காதலி இருப்பாள் என நம்புகிறான்.அது நடக்காமல் போய் விடுமோ என்கிற பயம் அவளை பிரியமுடியாமல் படுகிற அவஸ்தை. இதுதான் கதை என  வடிவமைத்துக்கொண்டு வசனங்களால் விளையாடியிருக்கிறார்கள். கஞ்சாவும் கதையில் இருக்கிறது.

வசனங்கள் கதைக்கு எப்படி கை கொடுக்கிறதோ, அதைப் போல சாம் சி.எஸ்.இசையும் இதயம் தழுவிச்செல்கிறது.

“ஏ சண்டாளி,’பாடல் என்னமோ தெரியவில்லை மிகப் பெரிய தாக்கத்தை தருகிறது. பாடல்கள் மிகப் பெரிய பலம்.பால் பிரகாஷின் குரலில் “மறக்காதே,மறுக்காதே,எனை மாய்க்குமோ மனம்,இருப்பேனா இறப்பேனா உனை காணா தினம்”என்கிற வரிகளில் கந்தகப்பூக்கள் மணக்கின்றன.