மும்பையில் மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இதில்ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளதாகவும், ஜெயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்..

இப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால்சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாகும் இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் கேரக்டரில் நடிக்கின்றனர்.இவர்களுடன் செந்தில், ஜீவிதா ராஜசேகர் உட்படப் பலர் நடித்து வருகின்றனர்.  ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 

கடந்த மார்ச் மாதம் செஞ்சியில் உள்ள பழைமை வாய்ந்த அம்மன் கோயில் ஒன்றில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து திருவண்ணாமலை, பாண்டிச்சேரி அருகே உள்ள கிராமங்களிலும் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

தற்போது ரஜினி நடிக்கும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்படுகின்றன.கடந்த சில நாள்களாக மும்பையில் படப்பிடிப்பு நடந்து வந்தாலும், ரஜினி சமபந்தப்பட்ட காட்சிகள் , இன்று தொடங்கியுள்ளது.

இதில், ரஜினியின் தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடித்து வருகிறார். மும்பையில் இம்மாத இறுதி வரை படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும் என்கிறார்கள். இதனையடுத்து ஐதராபாத் மற்றும் திருவண்ணாமலையில் நடத்தி மொத்த படப்பிடிப்பே முடிக்கப்பட்டு விடும் என்கிறது படக்குழு.

தற்போது மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள லால் சலாம் போஸ்டரில், ரஜினி ‘டான்’ லுக்கில்,கருப்புக்கண்ணாடி, சிவப்பு நிற தொப்பி, லேசான தாடி,  என மிரட்டலாக காட்சியளிக்கிறார்.

“மும்பையில் இருந்து திரும்பிய மொய்தீன் பாய் எனவும், சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” என இஸ்லாமியர்கள் வணக்கம் தெரிவிக்கும் வாசகமும் இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.