திரைப்படமாகும் ‘திருக்குறள்’! ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்!!
கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது. இது குறித்து இயக்குனர் ஏ.ஜெபாலகிருஷ்ணன் கூறுகையில்,
“பைபிளிற்குப் பின் உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். அச்சு ஊடகம் என்பது எழுத்தறிந்தோர்க்கு மட்டுமே. காட்சி ஊடகமோ எவ்வித தடையுமின்றி உலகின் அனைத்து மக்களையும் சென்றடையும்; இசையைப் போல; ஓவியத்தைப் போல;திருக்குறளைத் திரைப்படமாக்க இதுவும் ஒரு காரணம். இமாலயக் கருத்துகளை ஈரடியில் எளிதாகச் சொல்லிவிடுகிறது திருக்குறள். ஆனால் திருக்குறளின் உள்ளார்ந்த ஒளியை, அதன் உயிர்ப்பை மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்குவது அத்தனை எளிதல்ல என்பது திரைக்கதை எழுதும்போது உணர முடிந்தது.அறத்தினை வலியுறுத்த தோன்றிய நீதி நெறிநூல் என்றாலும் குறள் வெறுமனே பிரசார இலக்கியமல்ல. கவித்துவமும், அழகியலும் மிக்க அற்புதப் படைப்பு. திரை மொழியிலும் இதை பிரதிபலிக்க முயற்சித்துள்ளோம்.
திருவள்ளுவரோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டினையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளோம். மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க் களக்காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம் பெறுகின்றன. அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் என வாழ்வியல் குறித்தும் இத்திரைப்படம் பேசவிருக்கிறது.அதோடு அன்றைய மெய்யியல், அறவியல், அரசியல், பொருளியல், சமூகவியல் என அத்தனை தரவுகளோடும், சங்க கால ஐந்து நில மாந்தர்களும் இத்திரைப்படத்தில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர்.திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தினை சப்-டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.
இத்திரைப்படத்திற்கென தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
காமராஜ் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமெழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்க, வரும் தைத்திங்கள் திருவள்ளுவர் தினத்தன்று இத்திரைப்படத்திற்கான துவக்க விழா நடைபெறுகிறது.