என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சி தான்! வாழ்த்திய முக.ஸ்டாலின்!! நெகிழ்ச்சியில் இளையராஜா!!!

இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இளையராஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். வாழ்த்து சொல்ல  நேரில் வந்து இருந்த ரசிகர்கள் இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இளையராஜாவின் உண்மையான பிறந்த தேதி ஜூன் 3. ஆனால்  அன்று  மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்த நாள் என்பதாலும் ,அவர் மீது இருந்த அன்பினாலும் , தனது பிறந்த நாளை ஜூன் 2ஆம் தேதிக்கு மாற்றிக் கொண்டார். மேலும்  இளையராஜாவுக்கு இசைஞானி  என்ற பட்டம் சூட்டியதே முன்னாள் முதல்வர் கருணாநிதி  என்பதும் குறிப்பிடத்தக்கது இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் தனது 82 வது பிறந்தநாளை கொண்டாடிய இசைஞானி இளையராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது , “எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன திரைப்பிரபலங்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களும், என் ரசிகர்களுக்கும், என்னை சந்திக்க வேண்டும் என்பதற்கான கஷ்டப்பட்டு இங்கு வந்து இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என் பிறந்த நாளுக்காக வாழ்த்து சொல்ல இத்தனை பேர் வந்து இருப்பதை பார்த்து வாய் அடைத்துவிட்டது. இவர்களுக்கு என் மேல் எவ்வளவு அன்பு என நினைக்கும் போது, வார்த்தை வரவில்லை. இத்தனை அன்பை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி. என் மேல் எவ்வளவு அன்பு இருந்தால், அவர்களின் சிரமத்தை எல்லாம் பார்க்காமல், இவ்வளவு தூரம் கடந்து வந்து, இரவெல்லாம் விழித்து இருந்து, பேருந்தில் ஏறி, ரயிலில் ஏறி எவ்வளவு சிரமத்தை தாண்டி வந்து இருப்பார்கள். என்னை பார்ப்பது என்பது ஒரு சாதாரணமான விஷயம். ஆனால், அதற்காக எங்கிருந்தோ சிரமப்பட்டு, என்னை பார்க்க போகிறோம் என்ற ஆசையில் ஒரு வாரம் தூங்காதவர்களும் இருக்கிறார்கள், அவர்களை எனக்கு நன்றாக தெரியும். அவர்களுக்கு எல்லாம் எப்படி நான் வாழ்த்து சொல்வேன், வாழ்த்து சொல்வதற்கு எல்லாம் என்னிடம் வார்த்தையே இல்லை, என இளையராஜா நெகிழ்ந்து பேசினார்.