‘சாவீ’ – விமர்சனம்!

முதலில் ‘சாவு வீடு’ எனத் தலைப்பிடப்பட்டு விளம்பரங்கள் செய்து வந்த நிலையில், இத்திரைப்படம் ‘சாவீ’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. இதில் உதயா தீப், ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர் , மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே சேஷாத்திரி உட்பட பலர் நடித்துள்ளனர். கதை எழுதி இயக்கியிருக்கிறார், ஆண்டனிஅஜித். இசையமைத்திருக்கிறார்கள், சரண் ராகவன் – விஜே ரகுராம். ஒளிப்பதிவு செய்திருக்கிறார், பூபதி வெங்கடாசலம்.
‘சாவு வீட்டில்’ பிணம் காணாமல் போவதும், அதை கண்டுபிடிப்பதும் தான் படத்தின் கதை. ஒரு நல்ல டார்க் காமெடிக்கு, என்ன தேவையோ அது இந்த ஒரு வரியில் இருக்கிறது. ஆனால், திரைக்கதை நன்றாக இருக்கிறதா?
உதயா தீப், அவரது மாமன் மகள் கவிதா சுரேஷூம் காதலர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பினாலும், முறையாக இருந்தாலும் மறுப்புத்தெரிவிக்கிறார், உதயா தீப்பின் மாமா, பிரேம் கே சேஷாத்திரி. உதயா தீப்பின் மீதும், அவரது தந்தை மீதும் தீராத பகையுடன் இருந்து வருகிறார். இந்நிலையில், பிரேம் கே சேஷாத்திரி ஒரு சாலை விபத்தில் உயிரிழக்கிறார். அது கொலையாக இருக்குமோ? என சந்தேகம் நிலவி வரும் நிலையில், இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு, அடுத்த நாள் காலையில் தகனம் செய்ய முடிவு செய்யப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் அனைவரும் அயர்ந்து தூங்கிவிடுகின்றனர். காலை, கண் விழித்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி. இறந்தவரின் உடல் காணாமல் போயிருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில், இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா, விசாரணை செய்ய வருகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? ‘சாவீ’ படத்தின் மீதிக் கதை.
படத்தின் தலைப்பும், அது சம்பந்தமான விளம்பரங்களும், இந்தப்படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால், வடிவமைக்கப்பட்ட திரைக்கதை, திருப்தியை தரவில்லை. மர்மம், சீரியஸ், காமெடியாக செல்ல வேண்டிய திரைக்கதை ஏனோ தானோவக செல்கிறது. இருந்தாலும், பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு க்ளைமாக்ஸில் ஒரு சில டிவிஸ்ட்டுகளை வைத்து, சமூக நலன் சார்ந்த, போதைப்பொருளால் ஏற்படும் தீங்கினை சொல்லி சபாஷ் போட வைக்கின்றனர்.
கதையின் நாயகனாக ஜூடு கதாபாத்திரத்தில் நடித்துள்ள உதயா தீப், எதைப்பற்றியும் கவலைப்படாத, போதைப்பொருள் பழக்கமுள்ள இளைஞராக தன்னால் முடிந்தவரை நடித்துள்ளார். அவருடன் ஜோடியாக நடித்த கவிதா சுரேஷ், ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர் , மாஸ்டர் அஜய், பிரேம் கே சேஷாத்திரி உள்ளிட்டோரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.
அடுத்தடுத்து நடக்கும் மரணங்கள், அதை சுற்றி நிலவும் சம்பவங்களை, காமடியாக, சுவையாக கொடுத்திருந்தால் சாவீ வேறுவிதமாக இருந்திருக்கும்.