
ஆரி அர்ஜுனன், பவித்ரா, தீப்ஷிகா, சுப்பிரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ‘ஃபோர்த் ஃப்ளோர்’. எழுதி இயக்கியிருக்கிறார், எல்.ஆர்.சுந்தரபாண்டி. ஒளிப்பதிவு, லட்சுமணன். இசை, தரண்குமார்.
ஐடி துறையில் பணியாற்றி வரும் ஆரி அர்ஜுனன், ஒரு பிரச்சனையில் இருக்கும் முன்னாள் காதலிக்கு உதவுவதற்காகவும், வேலை நிமித்தமாகவும் சென்னை வருகிறார். கம்பெனியின் சர்வீஸ் அபார்ட்மென்டில் தங்குகிறார். அப்போது அவர் பல அமானுஷ்யமான விஷயங்களை எதிர் கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக தனது முன்னாள் காதலியின் புகைப்படமும் அவரது அபார்ட்மென்டில் இருக்கிறது. குழப்பமடையும் அவர், நண்பர்கள் மற்றும் போலீசின் துணையை நாடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை உளவியல் மற்றும் அமானுஷ்யம் கலந்து, குழப்பமான திரைக்கதையில் திகிலடைய வைக்கிறார், இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி.
ஐடி இளைஞராக ஆரி அர்ஜுனன். காதலியுடனான லிவ் இன் ரிலேஷன்ஷிப்பிலும், காதலியைத்தேடி அலையும் போதும், தன் குழந்தையை நினைத்து கலங்கும் போதும், அமானுஷ்யமான விஷயங்கள் தன்னை சுற்றி நடக்கும் போதும், கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் பவித்ரா மற்றும் தீப்ஷிகா, வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் என அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் எல்.ஆர்.சுந்தரபாண்டியன், திரைக்கதையை குழப்பத்துடன் நகர்த்திச் செல்கிறார். அமானுஷ்யமா? உளவியலா? என உறுதியாக சொல்லாமல் கடைசி வரை குழப்பியிருக்கிறார். மற்றபடி ஒரு நல்ல காதலன் காதலி. அவர்களுக்குள் எழும் ஈகோ பிரச்சனை அதனால் சிதறும் வாழ்க்கை. பில்டர்களின் அலுச்சாட்டியம் இவைகளை இன்னும் தெளிவாக சொல்லி ஒரு நல்ல கிரைம் ஸ்டோரிக்கான வாய்ப்பு இருந்தும் தவற விட்டுள்ளார். ஒரு சில இடங்களில் மட்டுமே பயம் ஏற்படுகிறது. ஒரு காட்சியில் ஆரி, இன்னொரு ஆரியை கொன்று புதைப்பது போல் வருகிறது. ஏன் என்று புரியவில்லை! தரண்குமார் இசை ஓகே! ஜெ.லக்ஷ்மணனின் ஒளிப்பதிவும் பெரிதாக ஈர்க்கவில்லை!
‘4த் ஃப்ளோர்’ – டெம்ப்ளேட் பேய் திரைக்கதையில் ஒரு க்ரைம் டிராமா!












