கனிமொழிக்காக பிரசாரம் செய்யத் துடித்த ரஜினிகாந்த் மகள்!
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தி.மு.க எம்.பி கனிமொழியுடன் நெருக்கமானது பற்றி ‘யு டியூப்’ தளம் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அவரது பழைய பேட்டி தற்போது மீண்டும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் கனிமொழி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து கூறுகையில்,”ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருந்த அந்த சமயத்தில் அவரது மகள் ஐஸ்வரயா எனக்காக பிரசாரத்துக்கு வருகிறேன் என கூறினார். ஆனால் நானோ, ‘தயவு செய்து வராதே’ என்று கெஞ்சினேன். அதற்கு பிறகுதான் அவர் வரவில்லை” என்றார்.அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில், “எனக்கும் கனிமொழிக்குமான உறவு மிகவும் அழகானது. 20 வருட நட்பு அது. அது எங்கு தொடங்கியது, எப்படி பழகினோம் என எதையும் விவரிக்க முடியாது ஒரு உறவு. எப்போதெல்லாம் நான் சோகமாக உணர்கிறேனோ, யாரிடமாவது பேசவேண்டும் என்று தோன்றுகிறதோ, உடனே நான் என்னுடைய போனை எடுத்து கனிமொழிக்கு தான் போன் செய்வேன்.நாங்கள் குடும்ப உறுப்பினர்களை போல பேசிக் கொள்வோம். ஒருவருக்காக நான் கிளம்பி வருகிறேன் என்றால் அது அக்காவுக்காக மட்டும் தான். யாருக்காகவும் நான் எங்கும் செல்லமாட்டேன். ஆனால் கனிமொழி அக்காவுக்காக என்றால் எங்கிருந்தாலும் சென்றுவிடுவேன். அதற்கு அவசியமும் இல்லை. அவர் பிறந்ததில் இருந்தே அரசியல் வாதிதான். அரசியலைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது.அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எனது கோயில் வழிகாட்டி அவர்தான். நான் எந்த ஊருக்கு போனாலும் கனிமொழி அக்கா அனுப்பும் ஆட்கள் தான் என்னை அழைத்துச் செல்வார்கள்” இவ்வாறு ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.