கர, திரைப்படத்தில் தனுஷ் , மமிதா பைஜு, கே. எஸ் .ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, ஸ்ரீஜா ரவி , கருணாஸ், பிருத்விராஜ் பாண்டியராஜன், எம் எஸ் பாஸ்கர் , ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து எழுதி, விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இசை, ஜி.வி. பிரகாஷ் குமார். ஒளிப்பதிவு,தேனி ஈஸ்வர்.
பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடித்து வரும் தனுஷ், அதை கைவிட்டுவிட்டு, தன்னுடைய காதல் மனைவி மமிதா பைஜுவுடன் வாழ நினைக்கிறார். இதனால், கடைசியாக தன்னுடைய உறவினர் பிருத்விராஜ் பாண்டியராஜனுக்கு திருடுவதை கற்றுக்கொடுப்பதற்காக, இருவரும் ஒரு வீட்டிற்குள் நுழைகின்றனர். எதேச்சையாக வீட்டி உரிமையாளர் வர, பிருத்விராஜ் தப்பித்துக்கொள்ள தனுஷ் மாட்டிக்கொள்கிறார். போலீஸ் அதிகாரி சுராஜ் வெஞ்சரமூடு தனுஷை வேண்டுமென்றே பல குற்றங்களில் தொடர்பு படுத்த நினைக்கிறார். அங்கிருந்து தப்பிக்கும் தனுஷ், மமிதா பைஜுவுடன் தலை மறைவு வாழ்க்கை வாழ்கின்றார். இந்நிலையில், தனுஷ் மமிதா பைஜூவுடன் சொந்த ஊருக்கு சென்று, அப்பா கே. எஸ். ரவிக்குமாரை சந்திக்கிறார். திருட்டுத்தொழிலை கைவிட்டு வாழ்ந்து வரும் தனுஷ், வங்கிகளை கொள்ளையடிக்கிறார். போலீஸ் அதிகாரி சுராஜ் வெஞ்சரமூடு தனுஷை தேடி வருகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே ‘கர’ படத்தின் கதை.
தனுஷூம், பிரித்வி பாண்டியராஜனும் கொள்ளையடிக்கும் முதல் காட்சியே திக் திக் காட்சியாக தொடங்குகிறது. இது போல், கொள்ளையடிக்கும் ஒவ்வொரு காட்சியுமே திக் திக் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஆடுகளம் நரேன், கருணாஸ் மற்றும் தனுஷ் இடம் பெறும் காட்சி திக் திக் திகில் காட்சி. இந்தக்காட்சியை ரசிக்க முடியாதவர்கள் இருக்கவே முடியாது. இப்படி பல காட்சிகள். அதைத்தொடர்ந்து பல மெலோ டிராமா காட்சிகளும் இருக்கிறது. முதன் முறையாக தனுஷூம், கே.எஸ்.ரவிக்குமாரும் சந்தித்துகொள்ளும் காட்சி, தந்தை மகன் சம்பந்தப்பட்ட நுட்பமான காட்சி. இந்தக்காட்சியில் கே.எஸ்.ரவிக்குமார் தனுஷை ஓரம் கட்டிவிட்டார். பாவனை, வசன உச்சரிப்பு இவைகளை சரியாக வெளிப்படுத்தி ரசிகர்களின் தனிக்கவனத்தை பெற்றுவிடுகிறார், கே.எஸ்.ரவிக்குமார். சிறந்த குணச்சித்திர நடிகராக மிளிர்கிறார்.

‘கர’ என்கிற கதாபாத்திரத்தில் தனுஷ். அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். பிருத்விராஜ் பாண்டியராஜனுக்கு திருட சொல்லிக்கொடுக்கும் காட்சி, மமிதா பைஜுவுடனான காட்சி, கே எஸ் ரவிக்குமார், ஶ்ரீஜா ரவி, கருணாஸ் ஆகியோருடனான காட்சிகளிலும் தனது வலுவான திரையிருப்பினை அலுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அப்பா கே எஸ் ரவிக்குமாரிடம் பணம் கேட்கும் காட்சியும், அம்மா ஶ்ரீஜா ரவியிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியும் கலங்க வைக்கும் காட்சிகள்.
மமிதா பைஜுவுக்கும் அதிக காட்சிகள் இல்லை. என்றாலும் கிடைத்த காட்சிகளில் குறைவில்லாத நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அவரைப்போலவே, ஶ்ரீஜா ரவி, கருணாஸ், ஆடுகளம் நரேன், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோரும் அகவனம் ஈர்க்கும்படி நடித்துள்ளனர். படத்தின் பெரும் பலமாக தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பும் அமைந்திருக்கிறது. கொள்ளையடிக்கும் காட்சிகளில், இசை படம் பார்ப்பவர்களின் நெஞ்சை தடதடக்க வைக்கிறது.
படத்தில் அனைத்து அம்சங்களும் நிறைந்திருந்தாலும், எடிட் செய்தாலும் திரைக்கதை பாதிக்காத, காட்சிகளின் நீளம் சோர்வைத்தருகிறது. அதை தவிர்த்திருக்கலாம்.
வங்கிகள், எழுதப் படிக்கத்தெரியாத சாமான்ய மக்களின் பணத்தை உறிஞ்சும் இன்னும் இருந்து வருவது வேதனைதான். அதை, அந்த மக்களின் பார்வையில் சொல்லியிருக்கிறார், இயக்குநர் விக்னேஷ் ராஜா. பாராட்டுக்கள்.
மொத்தத்தில், ‘கர’ வங்கிகளின் கறை!












