பிரசாந்த் பாண்டியராஜ், பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள் தாஸ், அருள் ஜோதி, சாயாதேவி, நம்ரிதா, மீனா, கௌசல்யா, வையாபுரி, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரசாந்த் பாண்டியராஜ் - விக்னேஷ் நடராஜன் இருவரும் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். விக்னேஷ் நடராஜன் இயக்கியிருக்கிறார். ‘சிவன் பிக்சர்ஸ்’, ‘எஸ் ஸ்டுடியோஸ்’ சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், பி விஷால், பி எம் ஆதிஸ்வர் ஆகியோர் தயாரித்துள்ளனர். பின்னணி இசை, சாம் சிஎஸ். ஒளிப்பதிவு,– அசோக் குமார். எடிட்டிங், ஆர் ராமர்.
‘வாரண்ட்’ இணையத்தொடர், ZEE 5 தமிழில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.
பாலாஜி சக்திவேல் – கௌசல்யா தம்பதியினரின் ஒரே மகன், பிரசாந்த் பாண்டியராஜ். சூது வாது தெரியாமல் வளர்க்கப்பட்ட தனது மகனை எப்படியாவது ஒரு அரசு வேலையில் அமர்த்திவிட முயற்சிக்கிறார், பாலாஜி சக்திவேல். அதற்கான எல்லா முயற்சியும் தோற்றுப்போன நிலையில், உறவினர் ஒருவரது சிபாரிசின் பேரில் காவல் துறையில் பணியமர்த்தப்படுகிறார், பயந்த சுபாவம் கொண்ட பிரசாந்த் பாண்டியராஜன். அப்படி பணிக்கு சேர்ந்த முதல் நாளிலிருந்தே பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் உடன் பணிபுரியும் சக காவலர்களால், தொடர்ந்து சந்தித்து வருகின்றார். இந்நிலையில், அவருக்கு சிறிய அளவிலான குற்றங்களில் வாய்தாவிற்கு வராத குற்றவாளிகளை கண்டுபிடித்து கோர்ட்டுக்கு அழைத்து வரும் பணி கொடுக்கப்படுகிறது. அதாவது ‘வாரண்ட்’ கேஸ். இந்த பணியையும் அவரால் சரிவர செய்ய முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படும் பிரசாந்த் பாண்டியராஜனிடம் இருந்து தப்பித்து விடுகிறார். இதன் காரண்மாக அவருக்கு மிகுந்த அவமானம் ஏற்படுகிறது. அதன்பிறகு, அவரது குணாதிசியம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, முரட்டுத்தனமான காவலராக மாறுகிறார். சக போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். அதோடு குற்றவாளிகள் அவரைக் கண்டாலே அலறுகின்றனர். ஒவ்வொரு குற்றவாளிகளையும் முரட்டுத்தனமாக தாக்குகிறார். இவ்வாறான சூழலில், ஒரு குற்றவாளி காவல் நிலைய சிறையில் மரணமடைகிறார். இதற்குப் பிறகு என்ன நடந்தது? என்பது தான், விறுவிறுப்பான 8 அத்தியாயங்களைக் கொண்ட, ‘வாரண்ட்’ இணையத்தொடர்.
முதல் தொடரே மிரட்டலுடன் செல்கிறது. காவல் நிலைய நடைமுறைகள். அவர்களின் அன்றாட செயல்முறைகள், நீதிமன்றத்திற்கும் காவல் நிலையத்திற்கும் உள்ள தொடர்பு. அது குறித்த நடைமுறைகள் என அனைத்துமே சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காவல் நிலையத்துக்குள்ளேயிருந்து நாம் பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
சூது வாது தெரியாமல் செல்லமாக வளர்க்கப்பட்ட, வெகுளித்தனமான கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்தியிருக்கிறார், பிரசாந்த் பாண்டியராஜன். உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க நிறைய வாய்ப்புகள் அதை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் நம்ரிதா, அருள்ஜோதி, சாயா தேவி ஆகிய மூவருமே குறிப்பிடத்தக்க வகையில் நடித்துள்ளனர். இவர்களில் சாயா தேவிகு அதிக காட்சிகள். அதை சிறப்பாக பயன் படுத்தியிருக்கிறார். பிரசாந்த் பாண்டியராஜின் பெற்றோர்களாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், கெளசல்யா இருவருமே சூப்பர். அவர்கள் மட்டுமில்லாது போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், ஏட்டையா ஹலோ கந்தசாமி, என அனைவருமே குறை சொல்லமுடியாத நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அசோக் குமாரின் ஒளிப்பதிவு, சாம்.சிஎஸ்-ன் பின்னணி இசை, ஆர் ராமரின் எடிட்டிங் ஆகியன திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது.
தூங்கி கொண்டிருக்கும் குற்றவாளியை எளிதாக பிடிப்பதை விட்டுவிட்டு, அவரை எழுப்பி பாடுபட்டு பிடிப்பது. தொடரின் அனைத்து ப்ளஸையும் மைனஸ் ஆக்குகிறது. இது போல் இன்னும் சில காட்சிகள். இவைகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால். வாரண்ட் விறுவிறுப்பான நல்ல க்ரைம் டிராமா!












