தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற இயக்குநர் ரிமா தாஸின் “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2” ( Village Rockstars 2) திரைப்படம் செப்டம்பர் 25, 2026 முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இப்படம் வெளியாக உள்ளது. அசாமில் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, MAMI Independent திரைப்பட விழாவிலும் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
அசாமின் கிராமப்புறப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், இளம்பெண் ஒருவரின் நட்பு, கனவுகள் மற்றும் வளரிளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு மாற்றங்களை மையமாகக் கொண்டுள்ளது. தனது தாயுடனான பாசமான உறவு, இசை மீதான ஆர்வம் மற்றும் தான் வாழும் நிலத்துடனான நெருக்கம் ஆகியவை அவளது வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகின்றன. அவளைச் சுற்றியுள்ள உலகம் மாறிக்கொண்டிருக்கும்போது, அவளும் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறாள்.
2017-ம் ஆண்டு வெளியான ரிமா தாஸின் “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் திரைப்படம் உருவாக்கிய உலகத்தின் தொடர்ச்சியாக இப்படம் அமைந்திருந்தாலும், தனித்த கதையாகவும் ரசிக்கக்கூடிய வகையிலும் சிறப்பான படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவம், இளமைப் பருவம், இயற்கை, காலநிலை மாற்றம், இசை மற்றும் தாய்–மகள் உறவு என பல்வேறு அம்சங்களை இப்படம் நெருக்கமாகப் பதிவு செய்கிறது.
அசாம் மற்றும் நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பாதிப்புகளின் பின்னணியில், நிலம், இயற்கை மற்றும் மாறிவரும் காலநிலை குறித்த இப்படத்தின் பார்வை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

இயக்குநர் ரிமா தாஸ் படம் குறித்து கூறுகையில்..
“‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ மற்றும் “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2” ஆகிய இரண்டு படங்களும் எனக்கு பத்து ஆண்டுகால உணர்வுப்பூர்வமான பயணம். சிலர் இந்தப் படங்களை திரைப்பட விழாக்களில் பார்த்திருக்கிறார்கள். இப்போது இந்தப் படத்தை இன்னும் பெரிய அளவிலான பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒவ்வொரு திரையிடலின்போதும் என்னைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்தப் படங்களை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அனுபவிப்பதுதான். ஒவ்வொருவரும் தங்களுக்கான ஒன்றை இப்படத்திலிருந்து எடுத்துச் செல்கிறார்கள். பார்வையாளர்கள் கதையை தங்களது அனுபவத்துடன் நிறைவு செய்யும் அளவுக்கு இடம் கொடுப்பதுதான் சினிமா செய்யக்கூடிய அழகான விஷயமாக இருக்கலாம்” என்கிறார்.












