‘போர் தொழில்’ பட புகழ் விக்னேஷ் ராஜாவின் கதையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் தமிழகமெங்கும் வெளியிடும் இத்திரைப்படம், வரும் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
விழாவில் பேசிய கதாசிரியர் விக்னேஷ் ராஜா,
“கார்ப்பரேட் படங்கள் எடுத்தபோது வட இந்தியாவில் ஒரு இன்னோவா காரில் ஜெய்ப்பூர் மழையில் சிக்கிக்கொண்டோம். அப்போது காரில் இருந்த சாதனங்கள் நனையாமல் இருக்க அருகில் கிடைத்த ஒரு பிளக்ஸ் பேனரை உடைத்துக் கட்டினோம். அந்தப் பேனரில் இருந்த நபரால் நாங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கினோம். அதுதான் இந்தக் கதையின் முதல் விதை” என்று படத்தின் சுவாரசியமான தொடக்கப் புள்ளியை உடைத்தார். மேலும், தனது 15 ஆண்டுகால நண்பரான அசோக் செல்வனின் உழைப்பைப் பாராட்டி நெகிழ்ந்தார்.
நாயகியாக நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில்,
“தயாரிப்பாளர் அபிநயா செல்வம் ஒரு பவர் ஹவுஸ். அசோக் செல்வனும் அவரும் என்னை ஒரு சொந்தக் குடும்பப் பெண்ணைப் போலத் தத்தெடுத்துக் கொண்டு இந்தத் திரைப்படப் பயணம் முழுவதும் நேர்த்தியாக வழிகாட்டினார்கள். இயக்குநர் கார்த்திகேயன் என்னிடமிருந்து மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில உணர்ச்சிமிகு காட்சிகளில் டப்பிங் பேசும்போது என் சொந்தக் குரலே எனக்குக் கேட்காத நிலை ஏற்பட்டது; அப்போதெல்லாம் அவர் எனக்குப் பொறுமையாகக் கற்றுக்கொடுத்து உதவினார். சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தது எனக்குப் பெருமையாக இருந்தது. நான் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் மிகப்பெரிய ரசிகை; இப்படத்திலும் அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் மிக அற்புதமாக வந்துள்ளன” என்றார்.

படத்தின் நாயகன் அசோக் செல்வன் தனது 2.5 ஆண்டுகால இடைவெளி மற்றும் குடும்பத்தினர் செய்த தியாகங்கள் குறித்துப் பேசுகையில்,
“ஒரு நல்ல சினிமா என்பது பார்க்கும் மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இத்திரைப்படத்தின் தயாரிப்புச் செலவு ஒரு கட்டத்தில் பட்ஜெட்டைத் தாண்டி எகிறிய போது, எனது பெற்றோர், எனது கனவுக்காக எங்களது சொந்த வீட்டை அடகு வைக்கப் பத்திரத்தை எவ்விதத் தயக்கமும் இன்றித் தந்தார்கள். அதற்கு என் அக்கா அபிநயா, அப்பா மற்றும் அம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் மட்டுமே பணியாற்றும் சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், எங்களது இந்தச் சிறிய பட்ஜெட் படத்தை மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளால் ஒரு பெரிய படமாகத் திரைக்கு மாற்றியுள்ளார். இப்படத்தில் ஒரு முக்கிய ஆக்ஷன் காட்சிக்காக எந்தவொரு டூப் நடிகரும் இல்லாமல், சுமார் 70 அடி உயரத்தில் இருந்து நான் தண்ணீருக்குள் குதித்து ஆபத்தான சாகசத்தை அச்சு அசலாகச் செய்துள்ளேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும் ப்ரீத்தி முகுந்தன் குறித்து நகைச்சுவையாகப் பேசிய அசோக் செல்வன்,
“அவர் எதிர்காலத்தில் எனக்குப் பெரிய லாபத்தைத் தரப்போகும், நான் முதலீடு செய்து வைத்துள்ள ஒரு ‘பிட்காயின்’ (Bitcoin) போன்றவர். நான் இன்று எந்தக் கல்லூரி விழாக்களுக்குச் சென்றாலும், அங்குள்ள இளைஞர்கள் அனைவரும் ‘ப்ரீத்தி முகுந்தனைக் கேட்டதாகச் சொல்லுங்கள்’ என்று கத்துகிறார்கள்” என்று கூறினார்.
நிறைவாக, “இத்திரைப்படத்தை உலகின் ஆகச்சிறந்த ஒரு உன்னதப் படம் என்று நான் தற்போதே பெரிய அளவில் வர்ணிக்க மாட்டேன். ஆனால், தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொரு ரசிகனுக்கும் இது ஒரு முழுமையான, நல்ல திரையரங்கு அனுபவத்தைக் கண்டிப்பாகக் கொடுக்கும்” என்று கூறித் தனது மனைவி கீர்த்தி பாண்டியனுக்கும், கதையை மட்டும் கேட்டுவிட்டு முழு சுதந்திரம் அளித்த ஐங்கரன் கருணாமூர்த்தி சாருக்கும் நன்றி தெரிவித்துத்தார்.












