அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் அவர்களின் ஆகச்சிறந்த இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகிப் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வசூல் சாதனை படைத்த பக்தித் திரைப்படம் ‘திருவிளையாடல்’.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, டி.எஸ். பாலையா, முத்துராமன், நாகேஷ் மற்றும் தேவிகா உள்ளிட்ட திரையுலகின் ஜாம்பவான்கள் பலர் இணைந்து நடித்த இத்திரைப்படத்திற்கு, கவிப்பேரரசு கண்ணதாசன் பாடல்கள் எழுத, ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.
காலங்கள் கடந்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த இந்த மாபெரும் காவியத்தை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி. லதா அவர்கள் தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பபத்துடன் தமிழகமெங்கும் மறு வெளியீடு (Re-Release) செய்யவுள்ளார்.
இப்படத்தின் பிரம்மாண்ட மறு வெளியீட்டை ஒட்டி, ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னை அண்ணாசாலையில் உள்ள புகழ்பெற்ற காசினோ (Casino) திரையரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், திருவிளையாடல் படத் தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகனான ஏ.என். பரமசிவம், நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், நடிகர்கள் மகேந்திரன், இளவரசு, பிரபல நடிகை வடிவுக்கரசி, நடிகரும் இயக்குநருமான அண்ணாதுரை கண்ணதாசன், கதாசிரியரும் இயக்குநருமான பூபதி ராஜா மற்றும் முனைவர் மருது மோகன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
1960-களின் பிரமிப்பான தியேட்டர் அனுபவத்தை மீண்டும் தற்கால ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கத் தயாராகியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, தற்போதே சினிமா வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












