விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருக்க அவர்களுடன், ஹரி கிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அஜய் கோஷ், அர்ஜுன் சிதம்பரம் , சாய் பிருத்வி ராஜ், சஹஸ்ரா, விஷ்ணு கோவிந்த், பாலமுருகன் உள்ளிட்ட பலரது நடிப்பினில், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்திருக்கும் திரைப்படம், பத்தா. எழுதி இயக்கியிருக்கிறார், பாலாஜி தரணிதரன். எஸ்.கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்க, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
பத்தா படத்தின் கதை 1980களில் நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரபல சாராய வியாபாரியும், ரௌடியுமான விஜய்சேதுபதியை கண்டாலே மக்கள் அனைவருக்கும் பயம். சாராயத்தொழிலையும், ரவுடித்தனத்தையும் கைவிட்டு நல்வழிக்கு திரும்ப கவலையுடன் காத்திருக்கிறார்கள், அவரது மனைவி லிஜோமோல், மற்றும் மகளுமான தேன்மொழியும்.
விஜய்சேதுபதி வசிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சிறுவன் சாய் பிருத்வி ராஜ், மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, கீழே டீ குடித்துக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதியின் அருகே செங்கல் விழுந்து அவருக்கு காயம் ஏற்படுகிறது. இது கொலை முயற்சியாக இருக்கும் என அவரது சகாக்கள் கருதி கல் வீசியவரைத் தேடி வருகிறார்கள். இதனால் சிறுவன் சாய் பிருத்வி ராஜ் மிரண்டு போகிறான். அதனைத்தொடர்ந்து, பள்ளி விடுமுறையின் போது, ஒரு சந்தர்ப்பத்தில் விஜய்சேதுபதியை பள்ளிக்கழிவறையின் உள்ளே வைத்து பூட்டிவிடுகிறார். விஜய்சேதுபதியின் மனைவி மற்றும் அவரது சகாக்கள் 1 வாரமாக தேடி வருகிறார்கள். விஜய் சேதுபதியின் நிலை என்ன ஆனது? என்பதுதான், ‘பத்தா’ படத்தின் மீதிக் கதை.

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய்சேதுபதிக்கு ‘பத்தா’ திரைப்படம், கொஞ்சம் கை கொடுத்திருக்கிறது. என்று தான் சொல்ல வேண்டும். பத்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி 1980களின் தோற்றத்தில் ரசிக்கும்படியாகவே நடித்திருக்கிறார். தன்னைப்பார்த்து ஊரே மிரண்ட ஊரார் தான் கழிவறௌக்குள் மாட்டிக்கொண்ட விஷ்யம் தெரிந்தால் அவமானமாகி விடும் என்று கலங்குவதும், வெளியே செல்ல முடியாமல் திணறுவதும், மனைவியை கொடுமை படுத்தும் காட்சிகளிலும், எதிரிகளை அடித்து பறக்கவிடுவதிலும், கதாபாத்திரற்கேற்ற நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
லிஜோ மோல் ஜோஸ், நடித்துள்ள அனைத்து காட்சிகளிலும் உயிரோட்டம். பள்ளிச்சிறுவன் சாய் பிருத்விராஜ் குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன்,அஜய் கோஷ், ,அர்ஜுன் சிதம்பரம் , ராஜ்,சஹஸ்ரா,விஷ்ணு கோவிந்த்,பாலமுருகன் போன்றவர்களும் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்த காட்சிகளில் குறையில்லை. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஒரு பாடல் மட்டும் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை, ஒரு சில இடங்களில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். என்று தோன்றுகிறது.
ஊரே பார்த்து மிரண்ட, மிருகமாக திரிந்த மனிதன், ஒரு சிறுவனின் செயலால் திருந்துவது தான் கதை. அதை எமோஷனலாக ரசிக்கும்படி, திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார், இயக்குநர் பாலாஜி தரணிதரன்.












