ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வோம் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல், யாரை வேண்டுமானாலும் கொண்டு படப்பிடிப்பு நடத்தலாம் என நடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருந்தது. அதே சமயம் பெப்சி தொழிலாளர்களுக்கான சம்பளம் இவ்வளவுதான் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது இது குறித்து முடிவெடுக்க,
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று மாலை நடந்தது. கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது,
தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. பெப்சியுடன் பணியாற்ற மாட்டோம் என்ற முடிவை சங்கம் திரும்பப் பெற வேண்டும். தற்போது 35 படங்களின் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஊதியத்தை தராவிட்டால் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்பில் பங்கேற்காமல், வேலைநிறுத்தம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.