“சீரழிந்து நிற்கின்றோம், ஆளவந்தோர்
திறமிழந்து நிற்கின்றார்!முடிவே இல்லை!”என்றார் கவிப்பேரரசர் கண்ணதாசன்.அது உண்மைதானே!
இல்லாவிடில் ‘உயிர் கொடு காவிரி’ என மன்றாடிக் கொண்டிருப்போமா? அச்சு இசையில் இயக்குநர் ராகேஷ் வெளியிட்ட ஒற்றைப்பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த அனைவருமே அடிவயிறில் கிளம்பிய அக்கினி காற்றைத்தான் பேச்சாக வெளிப்படுத்தினார்கள்.
வழக்கத்திற்கு மாறாக மக்கள் தொடர்பாளர் ஜான் காவிரி தொடர்பான அன்றைய புலவன் பாடி வைத்தவைகளை தொகுத்து வைத்து நினைவு படுத்தி ஒவ்வொரு பேச்சாளர்க்கும் முகவுரையாக்கி தந்தார்.ஒரு திரைப்பட மக்கள் தொடர்பாளரிடம் இத்தகைய ஆய்வுத் தமிழைக் கேட்டதில்லை.இயக்குநர்கள் வ.கவுதமன், மீரா கதிரவன்,சுரேஷ் காமாட்சி, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி.ஜி.முத்தையா, மைம் கோபி,சபரிமாலா,இன்னும் பல இன மொழி ஆர்வலர்கள் பேசினார்கள்.
மனதில் ஆழமுடன் பதிந்தது மீரா கதிரவனின் எச்சரிக்கை. அது உண்மையும் கூட!
“வெளிமாநிலங்களுக்கு தமிழன் ஏதிலியாக விரட்டப்படுவான்.நம்மை நடுவண் அரசு தூக்கி எறியும்!”என்று கணக்கிட்டவர் தனக்கு தணிக்கைக் குழுவினால் நேர்ந்த அவலத்தையும் சுட்டிக்காட்டினார்.முத்துக்குமார்,திலீபன் என்கிற பெயர்களை சொன்னதால் இழுத்தடிக்கப்பட்ட கொடுமையை சொன்னார். நதி செத்துப்போனால் நாகரீகமும் இறந்து விட்டது என்பதாகிவிடும். காவிரியை சாக விடாதீர்கள் “என்றார்.
உண்மைதானே! பின்னர் இசை வெளியீட்டு விழா நடந்தது.