11 ம் தேதி காலையில் கல்யாண வீடு மாதிரி மாறிவிட்டது சத்யம் திரை அரங்கம்.
2 D என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பான ‘கடைக்குட்டி சிங்கம் ‘படத்துக்காக சக்தி பிலிம் பாக்டரி சக்திவேலன் செய்திருந்த சிறப்பு ஏற்பாடு, கதை பெரிய குடும்பம் தொடர்புடையது என்பதால் அத்தைகளாக நடித்திருந்தவர்கள் சீர் வரிசைகளுடன் வந்து விட்டார்கள். கேரக்டரின் மேக் அப்புடன் சத்யராஜும் வந்து விட்டார்.எல்லோருமே வேட்டி,சட்டையில்தான்! சம்பந்தி வீடு, சண்டைக்கார வீடு என்று தியேட்டரே கலகலவென இருந்தது.
கதைப்படி சத்யராஜுக்கு பானு பிரியா,விஜி என இரண்டு மனைவிகள். “மூணாவதுக்கு முயற்சி பண்ணினேன் முடியாமப்போச்சு”என்பது மனக்குறை.இதை இயக்குநர் பாண்டிராஜிடம் சொல்லியிருந்தால் இன்னொரு கேரக்டர் கிடைத்திருக்கும்.இந்த கதையில் 29 நடிகர்கள் நடித்திருக்கிறபோது 30 வதாக ஒரு ஆளை சேர்த்திருக்கலாம்.
படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா உரிமையுடன்” இந்த ஒப்பனையுடன் நீங்க வந்திருக்க வேணாமே மாமா” என சத்யராஜிடம் சொன்னார்.
சிவகுமார்- சத்யராஜ் இருவரது குடும்பமும் உறவு முறை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தம்பி கார்த்தி ஹீரோ, தயாரிப்பாளர் அண்ணன் சூர்யா , இவர்களது அப்பா சிவகுமார் இவர்களுடன் சத்யராஜும்! பழைய நினைவுகள் கார்மேகமாகி மழையெனப் பொழியாதா?
நிகழ்வுகளை சொன்னார் சிவகுமார்.
“1920- சத்யராஜின் தாத்தா லண்டனில் படித்தவர் ஜமீன் குடும்பம். வசதிக்கு பஞ்சமில்லை. சத்யராஜுக்கு சினிமாவில் நடிக்க ஆசை. கிளம்பி வந்து விட்டார். நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் நாடகக்குழுவில் பத்து ரூபா சம்பளத்துக்கு சேர்த்து விட்டேன்.
நானும் மாதம்பட்டி சிவகுமாரும் சேர்ந்து சத்யராஜுக்கு சொந்தத்தில் பெண் பார்த்து கல்யாணம் நடத்தி வைத்தோம். நான் கடைசியாக நடித்த படத்தில் வாங்கிய சம்பளம் ஐந்து லட்சம். ஆனால் இன்று சத்யராஜ் கோடிகளில் வாங்குகிறார், பாகுபலி கட்டப்பாவாக உலகம் முழுவதும் அறிமுகம்.
இவர் தொடக்கத்தில் என்னெவெல்லாம் வேலை பார்த்திருக்கிறார். சென்னையில் கரைதட்டிய கப்பலில் இருந்து ஸ்கிராப்களை வெட்டி வியாபாரம். அப்புறம் ஒரு ஐஸ்கிரீம் பார்லர். பாம்குரோவ் ஓட்டல் இருக்கும் சாலையில் விஜயசங்கர் கண் மருத்துவ மனைக்குப் பக்கத்தில் அந்த பார்லர்.
கார்த்திக்கு மூன்று வயசு. சூர்யாவுக்கு ஐந்து வயசு இரண்டுபேரையும் மோட்டார் பைக்கில் உட்கார வைத்து அந்த பார்லருக்கு கூட்டிக்கிட்டு போனவர் சத்யராஜ்!” என்று சொல்ல மொத்த கூட்டமும் ஆரவாரம் செய்தது. யாருக்கு ஐஸ்கிரீம் வாங்கிகொடுத்தாரோ அவர் இன்று சம்பளம் கொடுத்திருக்கிறார். இதை பெருமையுடன் சொன்னவர் சத்யராஜ்.
கார்த்தி பேசுகையில் “ஊரோரம் புளியமரம், நான் வளர்ந்த மதுரையிலே ஆளுக்காள் நாட்டாமையாம்” என்கிற பருத்தி வீரன் பாடலை ராகமுடன் பாடி கடைக்குட்டி சிங்கத்தின் கதையின் மையக்கருத்தை சொன்னார். “படித்தவர்கள் விவசாயம் செய்ய வரவேண்டும், நாற்பது வயதுக்கு மேல்தான் சொந்தங்கள் தேவைப்படுகிறது. அக்காள் இல்லையே என்கிற குறை எனக்கு இருந்தது, ஏன்னா அந்த காலத்தில் அண்ணன் என்கூட சண்டை போடுவார், தண்ணீர் கேட்டால் தட்டி விட்டு எடுத்துக்கடா என்பார்.இந்த படத்தில் அக்காள் இல்லை என்கிற குறை நீங்கி விட்டது,
கடைக்குட்டி சிங்கம் அண்ணனுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் என்று நம்புகிறேன், நானும் அண்ணனும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறோம்.சீக்கிரமே நடக்கும் என்றார் கார்த்தி.
பொன்வண்ணன்,இளவரசு ,ஸ்ரீமன் ,சரவணன் ,சூரி மற்றும் சாயேஷா,பிரியாபவானி,மவுனிக யுவராணி செந்தி குமாரி என பெரிய பட்டாளமே படத்தில் இருக்கிறது.வேல்ராஜ்தான் ஒளிப்பதிவாளர்.
இசை இமான். படத்தில் வரும் ஒப்பனிங் சாங் பாடி தனது பேச்சை நிறைவு செய்தது புதுமையாக இருந்தது.
பசங்க பாண்டிராசுக்கு இந்த ‘கடைக்குட்டி சிங்கம் ‘புதிய திருப்புமுனையைத்தரும் என நம்பலாம். கார்த்தி கடைக்குட்டி என்பதைப்போல பாண்டிராசும் கடைக்குட்டிதான்!