பசுச் சாணம் கொண்டு மெழுகப்பட்டிருந்த மண் தரை. சொளகில் அரிசி பரப்பி கல் தேடிக்கொண்டிருந்தாள் பாப்பம்மா. பக்கத்தில் அய்யன். வெங்கல கும்பா நிறைய பழைய சோறு.
நீரும் மோரும் கலந்திருந்த பழைய சோற்றில் இரண்டு வெங்காயம் ,ஒரு பச்சை மிளகாய். கும்பாவில் இருந்ததை “விர்ர்..விர்ர்” என்ற ஓசையுடன் உறிஞ்சிக் கொண்டிருந்தார் .அவ்வப்போது வெங்காயம் கொஞ்சம், பச்சை மிளகாய் கொஞ்சம் என்று செல்லமாக ஒரு கடி. பழைய சோறு தேவாமிர்தமாக இரைப்பைக்குள் இறங்கிக் கொண்டிருந்தது.
“பாப்பு…கருவாடு சுட்டு வச்சிருக்கலாம்ல?”
அய்யன் கடும் உழைப்பாளி. வாய்க்கு வஞ்சகம் செய்ய மாட்டார். ‘ஏழைக்கேத்த எள்ளுருண்டை ‘என்பது மாதிரி காலையிலும் , மத்தியானமும் கஞ்சியோ, கூழோ எதுவானாலும் சரி,கவலையில்லை.ஆனால் தொட்டுக்கொள்வதற்கு மட்டும் ‘சுள்; என்று உப்புக்கண்டமோ,கருவாடோ ஒன்று இருக்க வேண்டும்.
“ஆயிப் போயிருச்சு..!வீட்ல எதுவுமில்ல.கடைப்பக்கமா போனீங்கன்னா வாங்கியாந்திருங்க” . சொளகிலுள்ள அரிசியை அப்படியும், இப்படியுமாக தள்ளிவிட்டு ஒரு புடை புடைத்தாள் பாப்பம்மா.
“தீந்து போச்சுங்கிறத நேத்தே சொல்லிருக்கலாம்ல?”
“மறந்து போயிட்டேன். மாயன் சம்சாரம் பஞ்சவர்ணம் நேத்து தலை குளிச்சான்னு இருந்த கருவாட்டையும் உப்புக்கண்டத்தையும் கொடுத்துவுட்டுட்டேன்.அவளுக்கு யாரு இருக்கா நம்மள விட்டா?”
“அதுவும் சரிதான்! ” காலியான கும்பாவை ஓரமாக தள்ளி வைத்தார். மீசையில் இருந்த பருக்கையை துடைத்துக் கொண்ட பெரிசு கொல்லைப்பக்கமாக ஒதுங்கியது.அங்கு கிடந்த பட்டியல் கல்லில் உட்கார்ந்து கொண்டு வெத்திலை போடவில்லை என்றால் அவருக்கு போஜனம் முழுமை பெறாது.அய்யனின் சிம்மாசனம் அந்த பட்டியல் கல்லுதான்! வெயில் காலத்தில் அந்த பட்டியல் கல்லில்தான் படுத்துக் கொள்வார்.
“கும்பிடுறேண்ணே!” என்றபடி உள்ளே வந்த பஞ்சவர்ணம் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த பாப்பம்மாள் அரிசியில் பொறுக்கியிருந்த கற்களை சுரைக் கொடி அருகில் கொட்டினாள்.
“இப்பத்தான் வழி தெரிஞ்சுதாக்கும்.? அண்ணன்காரனை மறந்திட்டியோன்னு மருகிப் போயிட்டேன் தாயி!” என்றார் அய்யன்.
“அட நீங்கவொன்னு….புதுசா கண்ணாலம் கட்டிக்கிட்டவ.புருசனை விட்டு வர்றதுக்கு மனசு வரணும்ல!எப்படி வருவா? வூட்டுக்குள்ளேயே புருசன்காரனை வச்சு பொத்தி பொத்தி அழகு பார்க்குறாளாக்கும் உம்மோட தங்கச்சி”!
அடுத்தவங்களை கேலி செய்வது என்றால் பாப்பம்மாவுக்கு பால் பாயாசம் குடிக்கிற மாதிரி! அதிலும் பஞ்சவர்ணம் என்றால் அவளுக்கு தொக்குதான்!
பஞ்சவர்ணம் விடுவாளா என்ன? அய்யனின் கையைப் பிடித்துக் கொண்டாள் . “ஏண்ணே…மதினி மனசுக்குள்ள ஏதோ வெசனத்த வச்சுக்கிட்டு சடச்சுக்குற மாதிரி இருக்கு. உங்கிட்ட நேரா சொல்றதுக்கு மதினிக்கி வெக்கம் போல..அதான் என்ன சாக்கா வச்சுக்கிட்டு சாடை பேசுறாக” என்றவள் பாப்பம்மாவைப் பார்த்து ” மதினி ,நான் வேணும்னா முத்து லெட்சுமிய கூட்டிக்கிட்டு எம்வூட்டுக்கு போயிடறேன்.எங்கண்ணனை நல்லா கவனிச்சு விடு! பொத்தி பொத்தி அழகு பாக்கச்சொல்றேன்.”என்று கேலி பேச , பாப்பம்மாள் பொய்க் கோபத்துடன் அவளை எட்டிப்பிடித்தாள்.” வாயப் பாரேன் சிறுக்கிக்கு …வானம் வரை நீளுது!”
அங்கு ஒரே கல கல.! மரத்தில் அடைவதற்கு முன் பறவைகள் கீச்சிடுமே, அது மாதிரி!
“அண்ணே..முத்துக்கு மாப்ள பாக்கிறீகளாமே நெஜம்தானா?”
சிரிப்பலைகளுக்கு மத்தியில் கேட்டாள் பஞ்சு. அவள் எந்த நோக்கத்துடன் அங்கு வந்திருந்தாளோ அதில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.எப்போது இதை கேட்பாள் என்று ஆசையுடன் எதிர்பார்த்து அறைக்குள் காத்திருந்த முத்துலட்சுமி சன்னல் கதவை லேசாக திறந்து வைத்திருந்தாள். அங்கிருந்து அவர்களை நன்றாகப் பார்க்க முடியும்.
“ஆமாம்மா…நம்ம வழிதான்!பையன் எட்டாப்பு படிச்சிருக்கான். பியூன் வேலை. கவருமெண்டு சம்பளம்.. பயபிள்ள கவலையில்லாம காலம் கடத்துமே! நம்மள மாதிரி நொம்பலப்பட வேணாம்ல?”
“அது சரிண்ணே….அவள ஒரு வார்த்தை கேட்டிகளா?”
“நம்ம முத்துக்கிட்டேயா…. அது பச்ச மண்ணும்மா? நல்லது கெட்டது தெரிஞ்சிக்கிற வயசு வரலியேம்மா?பெரியவக நாங்க பார்த்து செய்றப்ப கேட்டுப் போறதுக்கா செய்வோம்? உங்கப்பன் ஆத்தா அப்பன் உனக்கு கெட்டதய்யா பண்ணிட்டாக?”.
மற்றது நாளை!