கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் இருந்த வனப் பாதுகாப்பு காவல்காரர்கள் பதறி அடித்துக் கொண்டு அலுவலகத்துக்குள் ஓடினார்கள்.அய்யாவுக்கு அவ்வளவு பயம். குடகு மாவட்டம் சோமவாரப்பேட்டையை சேர்ந்த அய்யாவின் பெயர் மோகனய்யா.இளைஞர்.துடிப்பானவர்,கண்டிப்பானவர்.இளவட்டம் என்பதால் பயமறியாதவர் என்றால் அது பேத்தலாகி விடும்.அவர் வளர்ப்பு அப்படி. புதிதாக வந்திருக்கும் அதிகாரி.
“பாலார் செக்போஸ்ட்….இன்னிக்கி டியூட்டி யாரு?” என்று கேட்டார் மோகனய்யா.
“நாந்தான் சார்”என்றான் ஹொன்னப்பா.
” நீமட்டும்தானா?”
“எஸ். சார்!”
“வெரி,வெரி இம்பார்ட்டன்ட் செக்போஸ்ட்டுக்கு நீ மட்டும்தானா?”
“மென் பத்தாதுங்கய்யா!”
“வேற செக்போஸ்ட்னா போறதுக்கு தயங்குறிங்க…பாலார் செக் போஸ்ட்னா மட்டும் டைம் டேபிள் போட்டுக்கிட்டு நிக்கிறிங்கலேய்யா…என்ன காரணம்?”
“……………………………..!”
“வாய மூடிட்டு இருந்தா விட்ருவேனா மேன்? இன்னிக்கி நானும் பாலார் செக் போஸ்ட்டுக்கு வர்றேன் ,நாலு பேர் ரெடியா இருங்க.வெப்பன்ஸ லோட் பண்ணிக்க”என்று உத்திரவிட்டதும் குறிப்பிட்ட நான்கு பேரும் கோரஸாக “எஸ் ..சார்”என்று சல்யூட் வைத்தனர்.
ஜீப் பக்கமாக மோகனய்யா போனதும் பக்கத்தில் இருந்தவனின் வாயைக் கிண்டினான் ஹொன்னப்பா. “எதுக்குய்யா அய்யா வெப்பன்ஸ லோடு பண்ண சொல்றாரு?இன்பார்மண்டு பயலுக எவனாவது வந்தானுங்களா….இன்பர்மேஷன் எதுவும் வந்திருக்குமா? ” என்று கேட்டான்.
“தெரியலியே?இன்பர்மேஷன் இல்லாமயா நம்மள அலர்ட் பண்ணுவாங்க..நாம்ப சேப்டியா இருக்கனும்யா!இவங்க கொடுக்கிற ஆயிரத்துச்சொச்ச சம்பளத்தில குடும்பத்தை சவரட்சணை பண்றதுங்கிறது கிடாவ்ல பால் கறக்கிற வேல.ஏதோ கூப்பு வெட்டிட்டு போறவனும்,சந்தனக்கட்ட கொண்டு போறவனும் கொடுக்கிற காசுலதான் நிம்மதியா வண்டி ஓடிட்டிருக்கு .அதுலயும் இந்த ஆளு மண்ணை அள்ளி போட்ருவான் போலிருக்கேய்யா?”
“சத்தம் போட்டு பேசாதே?”
******************************************************
போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு கீழே குதித்தான் பொன்னையன்…கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக அந்த ரூட்டில் லாரி ஓட்டுகிறவன்.எந்த இடத்தில் நிறுத்த வேண்டும்,நிறுத்தக்கூடாது,பாரஸ்ட் அதிகாரிகள் எதிர்பட்டால் எந்த வழியில் தப்பிச்செல்வது , எந்தெந்த அதிகாரிகளை எப்படிக் கையாளுவது என்பது பொன்னையனுக்கு அத்துபடி.!
இடுப்பில் கட்டியிருந்த பச்சை நிற பட்டை பெல்ட்டில் இருந்து ஐந்து நோட்டுகளை உருவினான். ஐந்தும் நூறு ரூபாய் நோட்டுகள்.உள்ளங்கைக்குள் சுருட்டி மடக்கி வைத்துக் கொண்டான்.எதுவுமே இல்லாதது மாதிரி கையை வீசியபடி செக் போஸ்ட்டை நோக்கி நடந்தான்.
செக்போஸ்ட்டில் இருந்த ஹொன்னப்பாவுக்கு அவனைப்பார்த்ததும் என்ன நடக்கப்போகிறதோ என்கிற பயம் .வயிற்றுக்குள் கிடக்கும் வாய்வு வெளியேறாமல் கடமுடாவென இம்சிப்பது போன்ற அவஸ்தை.ஆபத்து மறைந்திருக்கிறது என்பதை எப்படி சொல்வது?ஜாடை காட்டும்போது அதிகாரி பார்த்து விட்டால் வேலைக்கு ஆபத்து.சொல்லாவிட்டால் நாளையோ மறுநாளோ வீரப்பனிடம் மாட்டிக்கொள்ள வேண்டியதாக இருக்கும்.அவன் கையை எடுப்பானோ ,காலை எடுப்பானோ?
இவனுடைய சிக்கல் தெரியாத பொன்னையன் வழக்கம்போல “கஞ்சா வேணுமா சார் ” என்றபடியே நெருங்கினான்.
மருண்டு போன ஹொன்னப்பா “யாரடா… நீ? எவனுக்குடா வேணும் கஞ்சா? …லாரியில் கஞ்சா கடத்துறியா?”என்றபடி அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு “சார்..சார்”என்று கூச்சல் போட,
மறைந்திருந்த கார்டு மோகனய்யாவும் மற்றவர்களும் மின்னல் வேகத்தில் பொன்னையன் மீது பாய்ந்து விட்டனர். துப்பாக்கியுடன் மோகனய்யா குறி பார்க்க, மற்றவர்கள் சூழ்ந்து கொண்டு அவனை புரட்டி எடுத்து விட்டனர்.
லாரியில் இருந்த 5 லட்சம் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளை மோகனய்யா கைப்பற்றி பொன்னையனையும் கைது செய்தார்,
பொன்னையன் கவலைப்படவில்லை.பயப்படவும் இல்லை.
என்ன நடந்திருக்கும்? நாளை!