விட்டான் ஓர் உதை! தகரப்போணி மரத்தில் மோதி நசுங்கி கீழே விழுந்தது.
“எந்த நாய்டா நம்ம ஆள கவ்விட்டுப்போனது?எங்கேருக்கு அந்த சொறி நாய்?எனக்கு லோடு போனத பத்தி கவலை இல்ல!மசுருக்கு சமம்.ஆனா நம்ம ஆள் மேலய கைய வச்சிருக்கான்னா அது எம்மேல கைய வச்சிட்ட மாதிரி!விட மாட்டேன். சங்க கடிச்சு துப்பிடுவேன் .இன்னும் பத்து மணி நேரத்தில அந்த நாய பத்தின அம்புட்டு வெவரமும் எனக்கு வந்தாகணும்” குமுறி விட்டு அப்படியே பாறை மேல மல்லாந்து விட்டான் வீரப்பன்.
அடக்க முடியாத கோபம் வந்தாலும் சரி, ஆட்களையோ, யானைகளையோ போட்டுவிட்டு வந்தாலும் சரி இப்படி மட்ட மல்லாக்கப் படுத்து விடுவான்.வானத்தை வெறித்துப் பார்த்தபடி கிடப்பான்.யாரும் எதுவும் பேச மாட்டார்கள்.அவனாக கூப்பிடும் வரை எதுவும் சொல்ல மாட்டார்கள்.எழுந்து முகம் கழுவி விட்டான் என்றால் கோபம் போய் விட்டது என்பதை புரிந்து கொள்வார்கள்.
டிரான்சிஸ்டரை காது பக்கமாக வைத்து க்கொண்டு மாநிலச் செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தான்.எவ்வளவு கடுமையான வேலைகள் இருந்தாலும் செய்திகள் கேட்க மட்டும் தவறுவதில்லை.அன்றாட நாட்டு நிலவரங்களை கேட்டு விட்டு தோழர்களுடன் பகிர்ந்து கொள்வான்.சில நேரங்களில் கடுமையான விவாதங்கள் நடக்கும்.
பக்கமாக வந்து நின்ற சேத்துக்குளி கோவிந்தன் செய்தி முடியும் வரை எதுவும் பேசவில்லை.
“பய ஏதோ முக்கியமான சங்கதி கொண்டாந்திருக்கான்!”
செய்தி வாசிப்பு முடிந்ததும் அப்படியே கை ரேடியோ பெட்டியை ஆப் செய்த வீரப்பனின் காது வரை குனிந்த சேத்துக்குளி திரட்டி வந்திருந்த சங்கதிகளை சொல்லி விட்டு நிமிர்ந்தான்.
வீரப்பன் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.!
பழுப்பான பச்சை நிற புஷ்கோட்டு.முழுக்கால் டவுசர்.பெரிய பெரிய சட்டைப்பைகள்.வகை வகையான வெடி குண்டுகள்.குறுக்கு வாரில் புல்லட்டுகள்.நவநாகரீக பிரெஞ்சு மாடல் துப்பாக்கி.
மூன்று பேரை மட்டும் சேர்த்துக்கொண்டு அந்த இருளோடு இருளாக மறைந்து விட்டான்.
பாலாறு கழிவுகள் எதுவும் அந்தப்பகுதியில் கலப்பதில்லை. தெளிவான நீரோட்டம் என்பதால் கூட்டம் கூட்டமாக கெண்டை மீன்கள் அலைந்து திரிவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பொழுது போவது தெரியாது.நீரோட்டத்தை எதிர்த்துப்போகும் சில மீன்கள் பாறை தட்டுப்படும் இடங்களில் துள்ளிக்குதித்து முன்னேறும்.இந்த அழகை பார்ப்பதற்கு தனி ரசனை வேண்டும்.
மாலை நேரங்களில் மீன்களுக்கு இரை போடுவது கார்டு மோகனய்யாவுக்கு ஒரு பொழுது போக்கு.பாலாறு பாலத்தில் நடுப்பகுதியில் நின்று கொண்டு பொரியை தூவி விடுவார்.வாய்களை திறந்து கொண்டு ‘மளக்..மளக் ‘கென விழுங்கும் மீன்களைப் பார்க்கும்போது அன்றாட கவலைகள் அவருக்கு மறந்து விடும்.
கொண்டு போயிருந்த பொரி தீரவே மன நிறைவுடன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
நீரைத் தழுவி வரும் குளிர்ந்த காற்று….வனப்பகுதிகளுக்கே உரிய தனித்தன்மை.!
கன்னட சினிமாப்பாடலை ‘ஹம்’ செய்தபடி அனுபவித்து நடை போட்ட மோகனய்யாவை ‘டப்’என்று குண்டு தாக்கியது.நெஞ்சை குறி பார்த்து சுட்டவன் வீரப்பன்.ஒரே புல்லட்.!
வேர் இழந்த மரம் மாதிரி பாலத்தில் சாய்ந்தார்.
முக்கல்,முனகல்,கதறல்,எதுவுமில்லை நொடிப்பொழுதில் உயிர் பிரிந்தது.நீண்ட நேரம் மரங்களின் மறைவில் பதுங்கியிருந்து நேரம் பார்த்து சுட்டுத் தள்ளி விட்டான்.
அனாதைப்பிணம் மாதிரி மோகனய்யாவின் உடல் பாலத்தில் கிடந்தது,! தனது டிரைவர் பொன்னையனை கைது செய்து ,சந்தன லோடை கைப்பற்றியதற்காக மோகனய்யாவுக்கு வீரப்பன் கோர்ட்டில் மரண தண்டனை,!
நாளை மற்றவை.!