ஜீவா டிரான்ஸ்போர்ட் பஸ் அந்த கரடு முரடான மலைப்பாதையில் தட்டுத் தடுமாறி,முக்கி முனகி ஏறியது. “மூச்சு நின்று போனால் உதவிக்கு நான் இருக்கேன் ” என்பதைப் போல அதை இன்னொரு பஸ் பாலோ செய்தது.!
இருள் மெதுவாக கூடி வந்து கொண்டிருந்தது. ஊதக் காற்றும் வீசவே பஸ்சில் இருந்தவர்கள் சன்னலை மூடிவிட்டு கண் அசந்திருந்திருந்தனர் . காரக்கண்டிக்கு இன்னும் பத்து மைல் போக வேண்டும்.கொண்டை ஊசி வளைவில் லாவகமாக பஸ்சை திருப்பிய ஜீவா டிரான்ஸ் போர்ட் டிரைவர் கியர் மாற்றுவதற்காக ‘கிளட்’சில் கால் வைத்து அழுத்தியதும் பக்கவாட்டில் இருந்து படார் என சத்தம்!
பாறையில் பஸ் இடித்து விட்டதோ!! பதைபதைப்புடன் பஸ்சை நிறுத்தி விட்டு கண்டக்டரைப் பார்த்தார்.
இரண்டு பஸ்களையும் சுற்றி வளைத்து விட்டார்கள் வீரப்பனின் ஆட்கள்! துப்பாக்கியின் பின் கட்டையால் பஸ்சை இடித்தவன் வீரப்பன். ” எவனாச்சும் சத்தம் போட்டான்னா குளோஸ் பண்ணிடுங்கடா” என்ற வீரப்பன் பாதை ஓரமாக கிடந்த பாறை மேல் ஏறிக்கொண்டான்.
“பஸ்சுக்குள்ள ஒரு பய இருக்ககூடாது. எல்லாத்தையும் எறக்கி விட்ரு”என்று சக தோழர்களுக்கு உத்திரவிட்ட சேத்துக்குளி பயணிகளிடமிருந்து கைப்பற்றிய பணம்,நகைகள் கண்டக்டர்களிடமிருந்த பணம் எல்லாவற்றையும் பெரிய பொட்டலமாக கட்டிவிட்டான்.
“ஆச்சா?”
“ஆச்சுண்ணே!”
“ரெண்டு பஸ்ஸையும் சீமத்தண்ணி ஊத்தி கொளுத்திப்பிடு!”
கட்டளை கிடைத்த அடுத்த நொடியே இரண்டு பஸ்களுக்கும் தீ வைக்கப்பட்டது. எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது தெரியாத பயணிகள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட , வீரப்பனின் ஆட்களும் எந்தப்பக்கமாக எப்படிப் போனார்கள் என்பது தெரியவில்லை .எல்லாம் கண்கட்டி வித்தை மாதிரி நடந்து விட்டது..
ஆண்டிப்பள்ளம் சரகப் போலீஸ் நிலையம். லாக் அப் அறை சொத சொதவென ஈரமாக கிடந்தது.
சிறு நீருடன் ஓரளவு தண்ணீரும் கலந்து தெளித்து விட்ட மாதிரி கெட்ட வாசம். மூச்சைப் பிடித்துக்கொண்டுதான் அந்த அறையின் வாசலை கடக்க வேண்டும்.
அந்த மூத்திரக்கிடங்கில் 11 பேர் முக்கால் நிர்வாணமாகக் கிடந்தனர்.ஜட்டி மட்டும்தான் இடுப்பில்! இரவுப்பகலாக போலீஸ்காரர்கள் மிதித்த மிதி அடித்த அடியில் சுருண்டு போய் இருந்தார்கள்.அத்தனை பேரையும் ஒரே சங்கிலியால் பிணைத்து இருந்தனர் .நம்பர் டூ மட்டும்வெளியில் போகலாம்.அப்போதும் சங்கிலிதான்.
“எவனாவது சொன்னானுங்களாய்யா?”
ஏட்டையாவிடம் கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“கெட்ட நாம்ருதா பயலுங்களா இருக்கானுங்க சார்!மூச்சு விட மாட்டேன்றானுங்க !”
“கால்ல பிரியெல்லாம் கட்டி காடு மேடுன்னு இழுத்தடிச்சா சொல்ல மாட்டாய்ங்களா?”
“அப்பவும் வாயத் தெறக்க மாட்டாய்ங்க சார். வீரப்பன் கொடுக்கிற மாமூலை வாங்குற கவர்மென்ட் ஆளுங்களே தகவல் கொடுக்கப் பயப்படுறானுங்க.அவன் கூடவே இருக்கிற களவாணிப்பயலுக இவனுங்க எப்படி சார் சொல்வானுங்க? எந்த நம்பிக்கைய்ல காட்டிக் கொடுப்பாய்ங்க?”
“சரிய்யா ! பினாத்தாதே! நாளைக்கு அத்தனை பயலுகளையும் கோர்ட்டுக்கு கொண்டு போகணும் ஜாக்கிரதை.நைட்ல ஸ்டேஷனை அசால்ட் பண்ண வந்தாலும் வருவானுங்க.லோடு பண்ணி எச்சரிக்கையா இருங்க “என்று அலர்ட் பண்ணிய இன்ஸ்பெக்டர் சல்யூட் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.
என்ன நடந்தது? நாளை!