ஆப்பிளைக் கடித்ததுமே ‘ஆஆ.!’ என அலறல்.கண்ணாடி உடைபட காஜல் வந்து ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ என்று மிளகாயைக் கடித்த மாதிரி கேட்பார். கண்ணாடியை உடைத்துக் கொண்டுவந்துதான் கேட்கவேண்டும் என்பது தேவை இல்லை என்றாலும் பார்வையாளர்கள் மனதில் உட்கார அந்த உடைப்புகாட்சி அவசியப்படுகிறது. அதைப் போலத்தான் இந்தப்படம்!.
தாலி அறுப்பான்களின் பின்னணியில் கொள்ளையில போற கம்மினாட்டி எவன் இருக்கிறான் என்பதை உரிச்சி உப்பைத் தடவி சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராகேஷ். பாராட்டி வை. ! எந்த நகைக் கடைக்காரரை நம்புறது என்று அப்பாவி குழம்பினால் அதுதான் இந்தப்படத்தின் தாக்கம்.யாரையோ குறி வைத்து அடிக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.
துருவ் படத்தின் நாயகன் .துருப்பிடித்த நடிப்பை எத்தனை பிராஸ்ஸோ கொண்டு தேய்ப்பது எனத் தெரியவில்லை. பிக்பாஸ் 2 வில் பின்னி எடுக்கும் ஐஸ்வர்யாவுக்கு நடிப்பு படத்தில் எட்டாத உயரத்தில் இருக்கிறது.எத்தனை ஏணிதான் தேவைப்படுமோ! இன்னொரு ஹீரோயின் அஞ்சனா பெட்டர். பத்து சகுனியை மண்டைக்குள் வைத்திருக்கிற நகைக்கடை முதலாளியாக ராதாரவி. இரண்டு மணி நேரத்தில் நடித்து முடித்து விட்டார் போலும்!
ஹீரோவினால் பிடிக்க முடியாத இடத்தைப் பிடித்திருப்பவர் அம்மாவாக வருகிற சரண்யா பொன்வண்ணன். இலட்சியம் மகனுக்கு அழகான பெண்ணைத் தேடுவது. இலக்கு ரியல் எஸ்டேட் காரர்கள் இடம் காட்டுகிற பயணத்தில் பங்கு பெற்று வெஜ், நான் -வெஜ் அயிட்டங்களை ஒரு கை பார்ப்பது.அப்படியே கோவில் தரிசனம் செய்வது. நல்ல வழிகாட்டுதல்.! எகிறுகிற டிரைவரை அடக்குகிற நாவன்மை எவர்க்கும் இல்லை.
படத்தை பார்க்கலாமுங்க!