
பாண்டிய நாடு’ படத்தில் தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரத்தை பெற்ற நடிகர் விக்ராந்த் ஒவ்வொரு படத்திலும் அவரின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறார்.. ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படமும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த படத்தில் நடிக்க எது தூண்டுதலாக இருந்தது என கேட்டபோது அவர் கூறியதாவது, “வெளிப்படையாக சொல்வதென்றால், நான் முதலில் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை.
இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இது ஒரு மல்ட்டி ஸ்டாரர் படம் என தெரிவித்த போது, என் முந்தைய படங்களும் அதே வகையில் இருந்ததால் இதை தவிர்க்க விரும்பினேன்.
மேலும், ‘பக்ரீத்’ போன்ற திரைப்படங்கள் என்னை ஒரு சோலோ ஹீரோவாக நிறுவும் நேரத்தில், இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள நான் தயங்கினேன். எனினும், ராம்பிரகாஷ் ராயப்பா குறைந்தது படத்தின் ஸ்கிரிப்ட்டையாவது கேளுங்கள் என கோரிக்கை வைத்தபோது, கதையை கேட்க முடிவு செய்தேன்.
கதை சொல்ல ஆரம்பித்த 10 நிமிடங்களில் கதை சொன்ன விதம் மற்றும் என் கதாபாத்திரத்தை அவர் வடிவமைத்திருந்த விதத்தை பார்த்து நான் வியப்படைந்தேன். கதையை கேட்ட பிறகு தவிர்க்கவே முடியாமல் ஒப்புக் கொண்டேன்” என்றார்.












