மூலக்கதை: சுசீந்திரன்,திரைக்கதை இயக்கம் : செல்வ சேகரன் , ஒளிப்பதிவு :கிருஷ்ணசாமி,இசை செல்வகணேஷ்,
விக்ராந்த்,பசுபதி,சூரி,அர்த்தனாபானு,அப்புக்குட்டி,கஞ்சா கருப்பு.
வெளியீடு :அலெக்சாண்டர்
*************
பாரம்பரியமான விளையாட்டுகளில் சடுகுடு என்கிற கபடியும் ஒன்று.
பட்டிதொட்டியெல்லாம் சடுகுடு சத்தம் கேட்காமல் இருக்காது.
“நாந்தாண்டா ங்கொப்பன் நல்ல முத்து பேரன் வெள்ளிப்பிரம்பெடுத்து வெளியாட வரேண்டா,தங்கப் பிரம்பெடுத்து தாலி கட்ட வரேண்டா”என்பதை மூச்சு விடாமல் பாடி எதிர் அணியின் ஏரியாவுக்குள் போய் யாரையாவது தொட்டு விட்டு வருவார்கள்.
அந்த அரிய விளையாட்டு அரிதாகி சிறுத்துப் போய்விட்டது.
அதனால்தானோ என்னவோ இயக்குநர் செல்வசேகரன் இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழுவின் தொடர்ச்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
முதல் பாதியை காதல்,அப்பா மகன் பாசம் என கொண்டு போனவர் பிற்பாதியை கபடிக்கான களமாக்கி இருக்கிறார்.
பசுபதி சிறந்த கபடி விளையாட்டுக்காரர் .ஊருக்காக பைனலில் ஆடவேண்டியவர் .தவிர்க்க முடியாத காரணத்தால் போகவில்லை. அணி தோற்றுவிட்டது. தோல்விக்கு நீதாண்டா காரணம் என ஊர் பழி போட பசுபதி அடுத்த ஊருக்கு குடி போகிறார்.
இவரது மகன் விக்ராந்துக்கு அப்பாவின் கதை தெரிந்ததும் அந்த ஊர்ப்பழியை போக்குவதற்கு என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
முற்பாதியை விட இரண்டாம் பாதியில்தான் வேகம் இருக்கிறது.
முரட்டுக்காளையை சாந்தமாக காட்டியிருக்கிறார்கள் பசுபதி வெல்டன். எங்கே மூர்க்கம் வெளிப்படவேண்டுமோ அங்கே அடிச்சு தூக்குகிறார்.
விக்ராந்த் நல்ல நடிகர். மாடுலேஷனில் மாற்றம் வேண்டும்.
சூரி வந்ததும் காமடியில் மப்பு ஏறுகிறது. இதில் கொத்துப் பரோட்டாவை ஒரு கை பார்க்கிறார். பரோட்டா பிரியராக அறிமுகம் ஆனவர் என்பதால் இதில் அப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். ரசிக்க முடிகிறது.
கபடி கோச்சராக கிஷோர். அதே மிடுக்கு,கண்டிப்பு. நிறைவான நடிப்பு.கபடி விளையாட்டுப் போட்டியை கிருஷ்ணசாமி படமாக்கியிருக்கிற விதம் நம்மை பதட்டமுள்ள பார்வையாளராக்கி விடுகிறது.
இயக்குநருக்கு முதல்படம் .வாழ்த்துவோம்.
சினிமா முரசத்தின் மார்க் 2 / 5